13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவது அவசியமானது: மஹிந்தவிடம் மோடி வலியுறுத்தல்

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவது அவசியமானது: மஹிந்தவிடம் மோடி வலியுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

26 Sep, 2020 | 6:43 pm

Colombo (News 1st) சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இலங்கையின் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவது அவசியமானதென இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் தெரிவித்துள்ளார்.

காணொளி தொழில்நுட்பத்தினூடாக இருநாட்டு பிரதமர்களுக்கும் இடையில் இன்று முற்பகல் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே பாரத பிரதமர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக பதவியேற்றதன் பின்னர் அரச தலைவர் ஒருவருடன் இடம்பெற்ற முதலாவது காணொளி கலந்துரையாடல் இதுவாகும்.

வலய மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பில் இன்றைய கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இலங்கையின் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவது கட்டாயமானதென, இந்திய வௌிவிவகார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமுத்திர பாதுகாப்பிற்கான ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவுகளில் இந்தியாவிற்கு இலங்கை வழங்கும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு இருநாட்டு பிரதமர்களுக்கும் இடையில் இதன்போது இணக்கம் காணப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருநாட்டு தேவைகளுக்கும் அமைய தற்போது அமுல்படுத்தப்படும் உட்கட்டமைப்பு செயற்றிட்டங்களை மேலும் துரிதப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இருநாட்டு தலைவர்களும் இணக்கம் தெரிவித்ததாக இந்திய வௌிவிவகார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்