தெஹிவளையில் தாக்குதலை நடத்துவதற்கு முன்னதாக தற்கொலை குண்டுதாரி புலனாய்வுப் பிரிவு அதிகாரியை சந்தித்ததாக பூஜித் சாட்சியம்

by Staff Writer 25-09-2020 | 7:27 PM
Colombo (News 1st) தற்கொலைக் குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற ஏப்ரல் 21 ஆம் திகதியன்று தெஹிவளையில் குண்டை வெடிக்கச் செய்த அப்துல் லத்தீஃப் ஜமீல் மொஹமட், அதற்கு 45 நிமிடங்களுக்கு முன்னர் புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவரை சந்தித்துள்ளதாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று (24) சாட்சியமளித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார். பயங்கரவாதியை சந்தித்தது யார் என்பதைக் கண்டறிந்து இந்த சந்திப்பு உத்தியோகபூர்வ மட்டத்தில் இடம்பெற்றதா என ஆராயுமாறு முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்தார். தாஜ் சமுத்ரா ஹோட்டலிலிருந்து வௌியேறிய குறித்த பயங்கரவாதி தெஹிவளைக்கு செல்வதற்காக இரண்டு முச்சக்கரவண்டிகளை பயன்படுத்தியுள்ளதாகவும் பூஜித் ஜயசுந்தர ஆணைக்குழுவில் தெரிவித்தார்.