கழுத்துப்பட்டி, ​மேலங்கி தொடர்பான கருத்தால் ஆத்திரமடைந்த அலி சப்ரி

by Bella Dalima 25-09-2020 | 8:09 PM
Colombo (News 1st) குருநாகல் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய டொக்டர் சாஃபி சஹாப்தீன் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி வாய்மூல பதிலை எதிர்பார்த்து நீதி அமைச்சரிடம் இன்று கேள்வி எழுப்பினார். வைத்திய அதிகாரிக்கு எதிராக நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் மற்றும் அவர்களது முகவரிகளை அம்பலப்படுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்தார். அதற்கு பதிலளித்த நீதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, இலங்கையில் தற்போது 7 இலட்சத்து 95 ஆயிரம் வழக்குகள் உள்ளதாகவும் அந்த வழக்குகளுக்காக ஆஜராகும் சட்டத்தரணிகளின் பெயர்களை வழங்கும் இயலுமை நீதி அமைச்சிற்கு இல்லை எனவும் குறிப்பிட்டார். இதனையடுத்து, மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் சத்திரசிகிச்சை நடத்தப்பட்டதா என சமிந்த விஜேசிறி கேள்வி எழுப்பினார். மீண்டும் அவர் நிலுவையில் உள்ள வழக்கொன்று தொடர்பிலேயே கேள்வி எழுப்பியதால் பதிலளிக்க முடியாது என அலி சப்ரி கூறினார்.
அவர் முதலாவது கேள்விக்கு பதிலளித்தார். அறிந்துள்ளதாகக் கூறினார். எவ்வளவு அறிந்துள்ளீர்கள் என நான் கேட்டேன். சிறந்த புத்திசாலியான ஜனாதிபதி சட்டத்தரணி அவர்களுக்கு தண்டனை வழங்குவார் என நாம் தற்போது எதிர்பார்க்கின்றோம். கடந்த ஆட்சியிலும் இடம்பெற்ற தவறுகள் தொடர்பில் தண்டனை வழங்குமாறு நாம் கூச்சலிட்டோம். இந்த கழுத்துப்பட்டி, ​மேலங்கி (Tie, Coat) அணிந்துள்ள கௌரவ அமைச்சர் அந்த அரசாங்கத்தையும் இந்த அரசாங்கத்தையும் எவ்வாறு உபசரிக்கின்றார் என்பதை இருபது வந்த பின்னர் நாம் பார்க்க முடியும்
என அலி சப்ரியை நோக்கி சமிந்த விஜேசிறி கூறினார். இதனால் கோபமடைந்த அலி சப்ரி,
உங்களிடம் அனுமதி கேட்டு, உங்களைப் போன்று ஆடை அணிய வேண்டுமா? நான் அணிய வேண்டியதை நீங்கள் கூற வேண்டியதில்லை. நீதிமன்றத்திற்குத் தேவையான வகையிலேயே நான் ஆடை அணிகிறேன். இனவாதத்தைத் தூண்ட வேண்டாம்
என கூறினார். வியத்கம தொடர்பில் வெட்கமடைவதாக சமிந்த விஜேசிறி பதிலளித்தார். கேள்வி கேட்பது பாராளுமன்ற உறுப்பினரின் உரிமை எனவும் அமைச்சர் பொறுப்பாக அதற்கு பதிலளிக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற வரலாற்றில் திடீரென இறக்கப்பட்ட அமைச்சர் ஆத்திரமடைந்து செயற்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் குறிப்பிட்டார். இறுதியாக, ஆடை தொடர்பான கேள்விக்கே பதிலளித்ததாவும் அதனால் அவருக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டிருந்தால் மன்னிப்புக் கோருவதாகவும் அலி சப்ரி கூறினார்.