ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டவருக்கு மரண தண்டனை 

ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட மீன் விற்பனையாளரின் ஆயுள் தண்டனை மரண தண்டனையாக மாற்றம்

by Staff Writer 24-09-2020 | 4:38 PM
Colombo (News 1st) ஹெரோயின் விற்பனை செய்தமைக்காக மீன் விற்பனையாளர் ஒருவருக்கு விதிக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை மரண தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து இன்று தீர்பளித்துள்ளார். 106 கிராம் ஹெரோயினை தம்வசம் வைத்திருந்தமை, ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டமை உள்ளிட்ட இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு புறக்கோட்டை மீன் விற்பனை சந்தையில் 1998 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 04 ஆம் திகதி பொலிஸ் போதைப்பொருள் பணியக அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். சந்தேகநபருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான விசாரணைகளின் போது, கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆயுள் தண்டனைக்கு எதிராக குற்றவாளியால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரணை செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குறித்த வழக்கை மீள் பரிசீலனை செய்யுமாறு மேல் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. மீள் பரிசீலனையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

ஏனைய செய்திகள்