பெலாரஸில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் வலுப்பெற்றது

பெலாரஸ் ஜனாதிபதியின் இரகசிய பதவிப்பிரமாணத்தின் பின்னர் ஆர்ப்பாட்டம் வலுப்பெற்றது

by Staff Writer 24-09-2020 | 9:33 AM
Colombo (News 1st) ஐரோப்பிய நாடான பெலாரஸ் ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லுக்கஷென்கோ (Alexander Lukashenko) இரகசியமாக பதவியேற்றதை தொடர்ந்து தலைநகர் மின்ஸ்க்கில் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. லுக்கஷென்கோ ஆறாவது தடவையாக ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லுக்கஷென்கோ போராட்டக்காரர்கள் பொலிஸாரால் தாக்கப்படுகின்ற மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்படும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வௌியாகியுள்ளன. அத்துடன் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நூற்றுக்கும் அதிகமானவர்களின் பங்குபற்றுதலுடன் லுக்கஷென்கோ பதவியேற்கும் வைபவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. இது திருடர்களின் சந்திப்பு என எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் விமர்சித்துள்ளார். கடந்த மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் லுக்கஷென்கோவுக்கு ஆதரவாக மோசடி இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. லுக்கஷென்கோ 80 வீதத்திற்கும் அதிக வாக்குகளை பெற்றுள்ளதாக பெலாரஸ் தேர்தல் ஆணைக்குழு அறிவித்ததை தொடர்ந்து அங்கு பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. எவ்வாறாயினும் அலெக்ஸாண்டர் லுக்கஷென்கோவை பெலாரஸின் முறையான ஜனாதிபதியாக ஏற்றுக்கொள்ளவில்லலை என பல்வேறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் அமெரிக்காவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.