நெற்செய்கையாளர்களுக்கு 100 வீத உர மானியத்தை வழங்க நடவடிக்கை

by Staff Writer 24-09-2020 | 1:14 PM
Colombo (News 1st) நெற்செய்கையாளர்களுக்கு வழங்கப்படும் உர மானியம் தொடர்பில் விவசாய அமைச்சர் மஹிந்தாநந்த அளுத்கமகே இன்று (24) பாராளுமன்றத்தில் கருத்து வௌியிட்டார். நெற்செய்கையாளர்களுக்கு 100 வீத உர மானியத்தை வழங்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். ஏனைய செய்கைகளுக்காக 385,000 மெற்றிக் தொன் கோட்டா காணப்படுவதாகவும் அவற்றையும் 100 வீதம் முழுமையாக பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். கொரோனா தொற்றின் பின்னர் நாட்டில் விவசாய உற்பத்தி அதிகரித்துள்ளதால் ஏனைய காலங்களை விட தற்போது அதிகளவில் உரத்திற்கான கேள்வி எழுந்துள்ளதாகவும் 2 வாரங்களுக்கு முன்னர் இதுகுறித்து அமைச்சரவையில் பத்திரமொன்றை தாக்கல் செய்ததாகவும் தங்களுக்கான வரையரையை அதனூடாக நீக்கிக் கொண்டதற்கமைய மேலும் 250,000 மெற்றிக் தொன் உரத்தை இறக்குமதி செய்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். கடந்த 15 நாட்களில் உரத்திற்கு ஓரளவு தட்டுப்பாடு நிலவியதை ஏற்றுக் கொள்வதாகவும் அடுத்த மாதமே பெரும்போகம் ஆரம்பமாகவுள்ளதாகவும் அதற்கு தேவையான முழுமையான உரத்தை விநியோகிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் கூறிய அமைச்சர், எனினும் நெற்செய்கையாளர்களுக்கு நூறு வீத மானிய அடிப்படையிலும் ஏனைய செய்கையாளர்களுக்கு ஒரு மெற்றிக் தொன் உரத்தை 1,500 ரூபா வீதம் விநியோகிக்க உள்ளதாகவும் விவசாயிகள் தமக்கு தேவையான அளவை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் விவசாய அமைச்சர் மஹிந்தாநந்த அளுத்கமகே பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.