ஊடக அறிக்கை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அறிவிப்பு

ஜனாதிபதி ஆணைக்குழுவில் வழங்கப்படும் சாட்சியங்கள் குறித்து ஊடக அறிக்கை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அறிவிப்பு

by Staff Writer 24-09-2020 | 10:32 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் வழங்கப்படும் சாட்சியங்கள் குறித்து ஊடக அறிக்கை வெளியிடுவதனைத் தவிர்க்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழு இன்று அறிவித்தது. உதவி ஆயர்கள் மூவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவருடைய பிரத்தியேக செயலாளர் சமீர டி சில்வா ஆகியோருக்கே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டது. ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்றும் சாட்சியமளித்தார். இந்த தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரடி பொறுப்புக்கூற வேண்டும் என முன்னாள் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர்களும் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் பூஜித் ஜயசுந்தர குறிப்பிட்டார். சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்காக உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் விஜித் மலல்கொட தலைமையில் குழுவொன்றை நியமிக்கும்படி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வருடம் ஏப்ரல் 23 ஆம் திகதி தமக்கு அறிவித்ததாக பூஜித் ஜயசுந்த கூறினார். தாம் இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு பதவி விலகினால் உள்நாட்டில் அல்லது வெளிநாட்டுப் பதவியொன்றை பெற்றுத்தருவதாகவும், குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிப்பதாகவும் தமக்கு கூறப்பட்டதாக பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். கடந்த அரசாங்கம் அரச புலனாய்வுப் பிரிவிற்கு சிறந்த ஒத்துழைப்பு வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார். அந்த அரசாங்கத்தால் அரச புலனாய்வுப் பிரிவிற்கு வழங்கப்பட்ட சில ஒதுக்கீடுகள் தொடர்பான விடயங்களை பாதுகாப்பு அமைச்சின் தகவல்களில் காண முடியவில்லை என்றும் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் சிறந்த தொடர்பு இருந்ததாகவும் அரச புலனாய்வுப் பிரிவு தொடர்ச்சியாக புலனாய்வுத் தகவல்களை ஜனாதிபதிக்கு வழங்கி வந்ததாகவும் முன்னாள் பொலிஸ் மா அதிபரான பூஜித் ஜயசுந்தர கூறினார். முன்னாள் ஜனாதிபதியுடன் தாம் கடும் அழுத்தத்துடனேயே செயற்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.