வேலையற்ற பட்டதாரிகள் இன்றும் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

வேலையற்ற பட்டதாரிகள் இன்றும் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

24 Sep, 2020 | 7:40 pm

Colombo (News 1st) கொழும்பில் இன்றும் சிலர் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

எதிர்ப்பில் ஈடுபட்ட இரண்டு தரப்பினர் நேற்றிரவு முழுவதும் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலும் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியிலும் தங்கியிருந்தனர்.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் நேற்றிரவு தங்கியிருந்த வேலையற்ற பட்டதாரிகள், தமக்கு வாக்குறுதியளிக்கப்பட்டவாறு அரச தொழில் வாய்ப்புகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

இன்று அவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலிருந்து அலரி மாளிகை வரை பேரணியாகச் சென்றனர்.

அவர்களில் 10 பேருக்கு பிரதமரின் உதவி செயலாளர், மேலும் ஒரு அதிகாரியை சந்திப்பதற்கான வாய்ப்புக் கிடைத்தது.

எனினும், இந்தப் பேச்சுவார்த்தைகளால் தமது பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, கடந்த வருடம் மே மாதம் வௌிவாரி பட்டப்படிப்பை பூர்த்தி செய்த சிலர் இன்று இரண்டாவது நாளாகவும் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்திலேயே அவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.

உரிய நேரத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்ய முடியாமற்போனதால், தம்மால் அரசாங்கம் வழங்கும் பட்டதாரி நியமனங்களை பெற முடியாமற்போயுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

அவர்களில் சிலருக்கு ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரி ஒருவரை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்தாலும், நிரந்தர தீர்வின்றி கலந்துரையாடல் நிறைவுபெற்றது.

கடந்த வருடம் உயிரியல் பிரிவில் உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்கள் சிலரும் இன்று முற்பகல் ஆர்ப்பாட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பழைய மற்றும் புதிய பாட விதானங்களின் கீழ் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி, சிறந்த பெறுபேறுகளைப் பெற்றிருந்தாலும் தமக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைக்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

உயிரியல் பிரிவில் இருந்து பல்கலைக்கழகங்களில் இணைக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

எதிர்ப்பில் ஈடுபட்ட மாணவர்கள் சிலர் ஜனாதிபதி செயலக அதிகாரிகளை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

ஒரு வாரத்திற்குள் பிரச்சினைக்கான தீர்வை வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்