சிறுத்தை சுட்டுக்கொலை: மரண பரிசோதனை முன்னெடுப்பு

by Staff Writer 23-09-2020 | 8:10 PM
Colombo (News 1st) மலையகத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுத்தையின் மரண பரிசோதனை ரந்தெனிகல வனஜீவராசிகள் சுகாதார மத்திய நிலையத்தில் நடத்தப்பட்டுள்ளது. முதுகெலும்பில் ஏற்பட்ட காயம் மற்றும் மூளையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாகவே சிறுத்தை உயிரிழந்துள்ளதாக மத்திய வலயத்திற்கு பொறுப்பான வனஜீவராசிகள் கால்நடை வைத்தியர் அகலங்க பினிதெனிய தெரிவித்தார். துப்பாக்கிச்சூடு தலையில் பட்டு உயிரிழந்த சிறுத்தையின் சடலம் மஸ்கெலியா பிரவுன்லோ தேயிலைத் தோட்டத்திலிருந்து நேற்று (22) கண்டுபிடிக்கப்பட்டது. தோட்டத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் சிலர் வழங்கிய தகவலின் மூலம் சிறுத்தையின் உடல் மீட்கப்பட்டது. அதன் பின்னர் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் விடயங்களை சமர்ப்பித்த வனஜீவராசிகள் திணைக்களம், சிறுத்தையின் உடலை ரந்தெனிகல வனஜீவராசிகள் சுகாதார மத்திய நிலையத்தில் ஒப்படைத்தது. 7 வயதுடைய ஆண் சிறுத்தையே பலியாகியுள்ளது. மஸ்கெலியா பிரவுன்லோ தேயிலைத் தோட்டத்தை அண்மித்துள்ள தமிழ் வித்தியாலயத்திற்கு அருகிலுள்ள பகுதியில் இந்த சிறுத்தை வீழ்ந்து கிடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எவரேனும் சிறுத்தையின் உடலை அங்கு கொண்டுவந்து போட்டிருக்காவிட்டால் இந்தத் துப்பாக்கிச்சூடு அவ்விடத்தை அண்மித்து இடம்பெற்றிருக்க வேண்டும். இது மிகவும் அருகிலிருந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு என்பதே கால்நடை வைத்தியர்களின் கருத்தாகும். இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் மலையகத்தில் 20 சிறுத்தைகள் கொல்லப்பட்டிருப்பதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.