கடும்போக்குவாதத்திற்கு எதிரான நடைமுறைகள் தோல்வியடைந்தமையே ஏப்ரல் 21 தாக்குதலுக்கு காரணம்: பூஜித் ஜயசுந்தர

கடும்போக்குவாதத்திற்கு எதிரான நடைமுறைகள் தோல்வியடைந்தமையே ஏப்ரல் 21 தாக்குதலுக்கு காரணம்: பூஜித் ஜயசுந்தர

எழுத்தாளர் Staff Writer

23 Sep, 2020 | 6:03 pm

Colombo (News 1st) 2012 ஆம் ஆண்டு முதல் கடும்போக்குவாதத்திற்கு எதிராக இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட நடைமுறைகள் தோல்வியடைந்தமையே, ஏப்ரல் 21 தாக்குதலுக்கான காரணம் என முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆ​ணைக்குழுவில் இன்று மீண்டும் சாட்சியமளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமிய கடும்போக்குவாதம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை நிறுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமக்கு ஆலோசனை வழங்கியதாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார்.

அந்த நடவடிக்கைகளை அரச புலனாய்வுப் பிரிவிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளாலும், தேவையற்ற அரசியல் தலையீடுகளாலும் தமது பணிகளை செவ்வனே முன்னெடுக்க முடியாமற்போனதாக பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

குறித்த தீர்மானம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் பிரதமரும் பரஸ்பர ஆலோசனைகளை வழங்கியதாகவும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

2018 ஒக்டோபர் 28 ஆம் திகதியின் பின்னர் தேசிய பாதுகாப்பு ​பேரவையின் கூட்டத்தில் தாம் பங்கேற்பதற்கு முன்னாள் ஜனாதிபதியால் தடை விதிக்கப்பட்டதாக ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரின் தனிப்பட்ட செயலாளர் சமீர டி சில்வா, மூன்று ஆயர்கள் தமது சட்டத்தரணிகளுடன் நாளை காலை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்