கோப் குழு இன்று முதற்தடவையாக கூடுகின்றது 

9 ஆவது பாராளுமன்றத்தில் இன்று கோப் குழு முதற்தடவையாக கூடுகின்றது 

by Staff Writer 22-09-2020 | 7:18 AM
Colombo (News 1st) 9 ஆவது பாராளுமன்றத்தில் பொது முயற்சியாண்மைக்கான நிலையியல் குழு எனப்படும் கோப் குழு இன்று (22) முதற்தடவையாக கூடவுள்ளது. இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கோப் குழு கூடவுள்ளது. இதேவேளை, அரசாங்க கணக்குகள் குழு எனப்படும் கோபா குழு நாளைய தினம் (23) முதற்தடவையாக கூடவுள்ளதாக பாராளுமன்ற ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது, செயற்குழு உறுப்பினர்களுள் தலைவர் தெரிவு செய்யப்படவுள்ளார். பொது முயற்சியாண்மைக்கான நிலையியல் குழு மற்றும் அரசாங்க கணக்குகள் குழுக்களுக்கு 22 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசாங்கத்தின் கீழியங்கும் பிற நிறுவனங்களின் நிதி நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கான அதிகாரம் கோப் குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கம், அமைச்சுகள், திணைக்களங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் நிர்வாகத்திறன் மற்றும் நிதி ஒழுங்கமைப்பு ஆகியவற்றை கண்காணிப்பதே கோபா குழுவின் பணியாக அமைந்துள்ளது.