20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபு பாராளுமன்றில் சமர்ப்பிப்பு 

by Staff Writer 22-09-2020 | 11:55 AM
Colombo (News 1st) 20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபு எதிர்க்கட்சியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பாராளுமன்றத்தில் இன்று (22) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானதுடன், பாராளுமன்ற உறுப்பினர்களின் எழுத்துமுல மற்றும் குறுக்கு கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அதனையடுத்து, சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தை வாசித்ததன் பின்னர் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியினால் 20 ஆம் அரசியலமைப்பு திருத்தம் சபையில் சமர்பிக்கப்பட்டது. இந்நிலையில், 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கடும் எதிர்ப்பை வௌியிட்டது. கடும் எதிர்ப்பிற்கும் மத்தியிலும் 20 ஆம் திருத்த வரைவு சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கறுப்புப் பட்டி அணிந்து தமது எதிர்ப்பை வௌியிட்டதுடன் அழிவுக்கு கொண்டு செல்லும் 20 வேண்டாம் என்ற பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர். 20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபு பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட இன்றைய நாள் இலங்கையின் கறுப்பு புள்ளியாக பதிவாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் தெரிவித்தார். இவ்வாறு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பை வௌியிடும் போது, இன்றைய நாளுக்கு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த நிதிச் சட்டங்கள் தொடர்பிலான விவாதத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு சபாநாயகர் சந்தர்ப்பம் வழங்கினார். 20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபின் முதலாம் வாசிப்பாக இன்றைய தினம் அமைவதுடம், இரண்டாம் வாசிப்பு நாளை (23) இடம்பெறவுள்ளது.