by Staff Writer 22-09-2020 | 7:54 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ வழங்கிய சாட்சியம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த அறிக்கை குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு நாளை (23) கட்டளையொன்றை பிறப்பிக்கவுள்ளது.
இன்று சாட்சி விசாரணை நிறைவடைந்ததன் பின்னர் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு முன்னாள் ஜனாதிபதி தனது சட்டத்தரணியுடன் இன்று சென்றிருந்தார்.
ஆணைக்குழு எவ்வித அறிவிப்பையும் விடுக்காத நிலையில், முன்னாள் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அண்மையில் ஆணைக்குழுவில் சாட்சியமளித்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் வௌியான அறிக்கைகளை நிராகரிக்கும் வகையில் மைத்திரிபால சிறிசேனவின் பிரத்தியேக செயலாளரின் கையொப்பத்துடன் அறிக்கையொன்றும் விடுக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பின் மூலம் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரம் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் தமது தரப்பை அச்சுறுத்தும் வகையில் அது அமைந்துள்ளதாகவும் ஹேமசிறி பெர்னாண்டோ சார்பில் ஆஜரான சட்டத்தரணி டில்ஷான் ஜயசூரிய இன்று தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது பிரத்தியேக செயலாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதிக்கு கருத்து சுதந்திரம் உள்ளதாக அவர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன இதன்போது தெரிவித்துள்ளார்.
முழு நாடும் உண்மையை அறிய வேண்டும் என்பதற்காக முன்னாள் ஜனாதிபதி இந்த அறிக்கையை விடுத்திருந்ததாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ ஆணைக்குழுவில் முன்வைத்த சில கருத்துக்களை நிராகரிக்கும் வகையில், கொழும்பு பேராயர் பேரருட்திரு மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையும் அண்மையில் அறிக்கையொன்றை விடுத்திருந்ததாக அவர் நினைவுகூர்ந்தார்.
எவ்வாறாயினும், குறித்த அறிக்கை மூலம் குற்றச்செயலால் பாதிக்கப்பட்டவர்கள், சாட்சியாளர்களுக்கு உதவுதல் மற்றும் பாதுகாத்தல் சட்டம் மாத்திரமல்லாது விசாரணை ஆணைக்குழு சட்டமும் மீறப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் சார்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்கும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அயிஷா ஜினசேன தெரிவித்துள்ளார்.
விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் வழங்கப்பட்டுள்ள சாட்சியமொன்றை நிராகரித்து அறிக்கை விடுப்பதன் மூலம் சாட்சியாளருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள அதேவேளை, ஆணைக்குழுவும் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆணைக்குழுவில் சட்டத்தரணிகள் குறுக்கு கேள்விகளை கேட்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ள நிலையிலும் இத்தகைய அறிக்கை வௌியிடப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்துகளால் ஆணைக்குழுவிற்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால், முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து அதனை நீக்குவதற்கு தயார் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி ஆஜராகுமாறு ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதேவேளை, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆணைக்குழு தொடர்பில் கருத்து வௌியிட்டார்.
ஆணைக்குழு முன்னெடுத்துள்ள வேலைத்திட்டம் குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் நியாயம் கிடைக்கும் என நம்புவதாகவும் கொழும்பு பேராயர் குறிப்பிட்டார்.