உயர் நீதிமன்றின் புதிய நீதிபதி தொடர்பில் ட்ரம்ப்

உயர் நீதிமன்ற நீதிபதி வெற்றிடத்திற்கு இவ்வாரத்தில் ஒருவரை பெயரிடவுள்ளதாக ட்ரம்ப் தெரிவிப்பு

by Staff Writer 22-09-2020 | 8:35 AM
Colombo (News 1st) அமெரிக்க உயர் நீதிமன்றத்தில் நிலவும் நீதிபதி வெற்றிடத்திற்கு இவ் வார இறுதியில் ஒருவரை பெயரிடவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அத்துடன், தமது நியமனத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதிக்கு முன்னர் உறுதிப்படுத்துமாறு செனட்டை வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், இந்த நியமனம் தொடர்பான பல்வேறு விமர்சனங்களும் கண்டனங்களும் வெளியிடப்படும் நிலையிலேயே ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பும் வௌியாகியுள்ளது. அமெரிக்க உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக கடமையாற்றிய Ruth Bader Ginsburg தமது 87 ஆவது வயதில் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்த நிலையிலேயே இந்த வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க உயர் நீதிமன்றத்திற்கான நீதிபதிகள் ஜனாதிபதியினால் பெயர் குறித்து நியமிக்கப்படுகின்றனர். ஜனாதிபதியின் இந்த நியமனம் தொடர்பில், செனட் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அது உறுதிப்படுத்தப்படவோ நிராகரிக்கப்படவோ முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.