கண்டியில் கட்டடம் இடிந்து வீழ்ந்தமை தொடர்பில் ஆராய விசேட பொலிஸ் குழு நியமனம் 

கண்டியில் கட்டடம் இடிந்து வீழ்ந்தமை தொடர்பில் ஆராய விசேட பொலிஸ் குழு நியமனம் 

கண்டியில் கட்டடம் இடிந்து வீழ்ந்தமை தொடர்பில் ஆராய விசேட பொலிஸ் குழு நியமனம் 

எழுத்தாளர் Staff Writer

22 Sep, 2020 | 7:51 am

Colombo (News 1st) கண்டி – பூவெலிகடயில் இடிந்து வீழ்ந்த கட்டடம், உரிய நிறுவனங்களிடம் அனுமதி பெற்று நிர்மாணிக்கப்பட்டதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக விசேட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கண்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவின் ஆலோசனையின் பேரில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்ட போது, உரிய நிறுவனங்களிடம் பெற்றுக்கொண்ட அனுமதியை மீறியே, கட்டடத்தின் உடைந்த பகுதி நிர்மாணிக்கப்பட்டமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கண்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்க கூறியுள்ளார்.

விசாரணை அறிக்கைககளுக்கமைய உரிய தரமின்றி கட்டடம் நிர்மாணிக்கப்பட்டமை உறுதிப்படுத்தப்படுமாயின், குற்றவியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கண்டி நகர எல்லைக்குபட்ட பகுதியில் ஆபத்து ஏற்படும் என சந்தேகிக்கப்படும் கட்டடங்களை ஆய்வு செய்வதற்கு 10 பேர் அடங்கிய குழுவை நியமிப்பதற்கு மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த விசேட குழுவின் முதற்கூட்டம் இன்று (22) காலை நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கண்டி – பூவெலிகடவில் கட்டடம் தாழிறங்கியமைக்கு, தளர்வான மண்ணின் மீது கட்டடம் நிர்மாணிக்கப்பட்டமையே காரணம் என தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

கட்டடத்தின் பாரத்தைத் தாங்க முடியாமையால் அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக, நிறுவகத்தின் கண்டி மாவட்டத்திற்குப் பொறுப்பான புவிச்சரிதவியல் நிபுணர் சமந்த போகஹபிடிய கூறினார்.

கண்டி – பூவெலிகடவில் தாழிறங்கிய 5 மாடி கட்டடம், பள்ளத்தாக்கு ஆரம்பமாகும் இடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

வீட்டின் உரிமையாளர் உள்ளிட்டவர்கள் அதிகாலை 5 மணிக்கு வீட்டிலிருந்து வௌியேறியதாகக் கூறினாலும், 3 – 4 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் முன்னெச்சரிக்கை கிடைத்தவுடன் அவர்கள் வீட்டிலிருந்து வௌியேறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த அபாயம் தொடர்பில் அயலவர்களுக்கு அவர்கள் அறிவிக்கவில்லை எனவும் அவ்வாறு அறிவிக்கப்பட்டிருந்தால் உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்கலாம் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

கண்டி – பூவெலிகட சங்கமித்ரா வீதியிலுள்ள கட்டடம் தாழிறங்கியதில் ஒன்றரை மாத சிசுவும் அதன் பெற்றோரும் பலியாகியமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்