இன்று முதல் சாரதிகள் கவனிக்க வேண்டியவை

இன்று முதல் சாரதிகள் கவனிக்க வேண்டியவை

இன்று முதல் சாரதிகள் கவனிக்க வேண்டியவை

எழுத்தாளர் Fazlullah Mubarak

21 Sep, 2020 | 12:46 pm

வீதி ஒழுங்கு விதிகள் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் அதனை மீறும் சாரதிகளுக்கு தண்டப்பணம் விதிக்கப்படவோ, நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படவோ மாட்டாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதி ஒழுங்கு விதிகளை மீறுவோருக்கு எதிராக, அடுத்த வாரம் முதல் தண்டப்பணம் விதிக்கப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் வாகன நெரிசலைக் குறைக்கும் நடவடிக்கையாக, வீதி ஒழுங்கு விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

கடந்த வாரம் முழுவதும் ஒத்திகை நடவடிக்கையாக இது இடம்பெற்றது.

இன்று காலை 6 மணி முதல் 9 மணி வரை வீதி ஒழுங்கு விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், மீண்டும் பிற்பகல் 4 மணியிலிருந்து இரவு 7 மணி வரை அது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இராஜகிரிய பகுதிக்கு சென்ற மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோன் நிலைமையை அவதானித்தார்.

இதேவேளை, காலி மஹமோதர வைத்தியசாலைக்கு அருகிலிருந்து காலி நகர் வரையிலும் காலி – கொழும்பு வீதியிலும் வீதி ஒழுங்கு விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

மாத்தறை நுபே சந்தியிலிருந்து கொடகம அதிவேக வீதி நுழைவாயில் நோக்கியும் காலி நோக்கியும் வீதி ஒழுங்கு விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்