by Staff Writer 19-09-2020 | 6:27 PM
Colombo (News 1st) தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் பதவியிலிருந்து விலகுவது என்ற தீர்க்கமான முடிவினை எடுத்துள்ளதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமது இராஜினாமா தொடர்பில் சி.வி.விக்னேஸ்வரன் அறிக்கை ஒன்றினூடாக தௌிவுபடுத்தியுள்ளார்.
தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டங்களுக்கு அரசியல் கலப்பற்ற வகையில் செயற்படுவதற்கே தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டதாக சி.வி.விக்னேஸ்வரன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இந்த நிலையில், தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளும் தமிழ் மக்களுக்கெதிரான அடக்குமுறைக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளையும் இணைக்கும் நோக்கில் செயற்படும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவினை வரவேற்பதாகவும் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இத்தகைய செயற்பாடுகளில் அரசியல் கட்சிகள் மாத்திரமின்றி ஏனைய பொது அமைப்புகளையும் உள்ளடக்கி அரசியல் சாராத வகையில் செயற்படுவது பொருத்தமானது எனவும் சி.வி. விக்னேஸ்வரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டதே தமிழ் மக்கள் பேரவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாம் அரசியல் கட்சியியொன்றின் தலைவராக செயற்படும் போது, தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் பதவியை வகிப்பது சாலச்சிறந்தது அல்லவெனவும், இதன் மூலம் ஏனைய கட்சிகள் பேரவையுடன் இணைவதற்கும் இது தடையாக அமையுமெனவும் சி.வி. விக்னேஸ்வரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.