ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பு; 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பு; 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பு; 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

எழுத்தாளர் Staff Writer

19 Sep, 2020 | 3:51 pm

Colombo (News 1st) களு மற்றும் களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

களு கங்கையின் நீர்மட்டம் இரத்தினபுரி மற்றும் புலத்சிங்கள பகுதிகளில் எச்சரிக்கைக்குரிய அளவில் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் எஸ். பி.சீ. சுகீஸ்வர குறிப்பிட்டுள்ளார்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதியில் நேற்றிரவு பெய்த கடும் மழை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதற்கமைய, மகாவலி கங்கையின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.

மழை வீழ்ச்சி அதிகரிக்கும் பட்சத்தில் சில பகுதிகளில் வௌ்ளம் ஏற்படக்கூடிய வாய்ப்புகளும் காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர், எஸ். பி.சீ. சுகீஸ்வர தெரிவித்துள்ளார்.

இதனால் ஆறுகள் மற்றும் கங்கைகளை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த விழிப்புடன் செயற்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பலத்த மழை காரணமாக 04 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

04 மாவட்டங்களிலும் அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட புவிச்சரிதவியல் நிபுணர் வசந்த சேனாதீர குறிப்பிட்டார்.

களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவிற்கும் கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, தெரணியகல, யட்டியந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல, எலபாத, இரத்தினபுரி, குருவிட்ட, எஹலியகொட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை மற்றும் அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 5.30 வரை இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை அமுலில் இருக்குமென தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட புவிச்சரிதவியல் நிபுணர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

நிலவும் பலத்த மழை காரணமாக மலையகத்தில் சில பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

இன்று காலை 05 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் நுவரெலியா மாவட்டத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அங்கு 150 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீட்டர் வரையிலான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகுமெனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் சில கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடற்றொழிலாளர்கள் தமது கடல் நடவடிக்கைகளின் போது மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் 22 ஆம் திகதி வரை கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டுமென வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்