வானிலை தொடர்பில் சிவப்பு அறிவித்தல் வௌியீடு

by Staff Writer 18-09-2020 | 5:03 PM
Colombo (News 1st) நாட்டின் சில பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 தொடக்கம் 150 மில்லிமீட்டர் வரையிலான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகுமெனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் சிவப்பு அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டின் சில கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தொடக்கம் திருகோணமலை, காங்கேசன்துறை மற்றும் புத்தளம் ஊடாக கொழும்பு வரையிலும் காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறித்த பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 60 தொடக்கம் 70 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுமெனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. கொழும்பு தொடக்கம் காலி வரையிலான கடற்பிராந்தியங்களின் ஆழமான மற்றும் ஆழமற்ற பகுதிகளில் கடல் கொந்தளிப்பு ஏற்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கற்பிட்டி முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களை அண்மித்த பகுதிகளில் கடலலை 2.5 தொடக்கம் 3 மீட்டருக்கு மேலெழக்கூடுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.