இலங்கையின் மின்சாரத் திட்டம் மீதான அமெரிக்காவின் அவசர ஆர்வத்திற்கு காரணம் என்ன?

by Staff Writer 18-09-2020 | 9:00 PM
Colombo (News 1st) தேசிய மின்சார சபையின் திட்டத்திற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவதற்குத் தயாராகவுள்ளதாக அமெரிக்க தூதுவர் அலைனா B. டெப்லிட்ஸ் மின்சக்தி அமைச்சரான டலஸ் அழகப்பெருமவிடம் தெரிவித்துள்ளார். அமெரிக்க தூதுவர் பொருளாதாரப் பிரிவின் தலைவரான சூசன் F.வோக்குடன் இணைந்து இன்று அமைச்சரை சந்தித்தார். இந்நாட்டு மின்சக்திப் பிரிவில் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் அபிவிருத்தி வழிமுறைகள் தொடர்பாக அமைச்சர் டலஸ் அழகப்பெருமவும் அமெரிக்க தூதரும் நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளனர். தேசிய மின்சாரத் தேவையில் பசுமை மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க மின்சக்தியின் மூலம் 70 வீதம் வரை அதிகரித்து, டீசல் மூலமான பங்களிப்பை 5 வீதமாகக் குறைப்பதே அரசாங்கத்தின் திட்டம் என்று அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார். மீள்புதுப்பிக்கத்தக்க சக்தியை விருத்தி செய்வதற்கான தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்கவும், புதிய மீள்புதுப்பிக்கத்தக்க மின்சக்தி செயற்றிட்டங்களை ஆரம்பிப்பதற்கும் தமது நாட்டு முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கவுள்ளதாக தூதரகத்தின் பொருளாதாரப் பிரிவு தலைவர் சூசன் F. வோக் கூறியுள்ளார். அவ்வாறான மின்சார செயற்றிட்டங்களை ஸ்தாபிப்பதற்காக சலுகைக் கடன்களை அறிமுகப்படுத்துவது தொடர்பில் சிந்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜூன் 25 ஆம் திகதி அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் அப்போதைய மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவை சந்தித்திருந்தார். LNG மின்நிலையம் உட்பட மின்நிலைய அபிவிருத்தித் திட்டங்களுக்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பை வழங்குவதற்கு இந்த சந்திப்பின் போது தூதுவர் இணங்கியதாக பின்னர் அரசாங்கம் அறிக்கையிட்டது. மின்சாரம் தொடர்பாக அமெரிக்காவின் இந்த அவசர ஆர்வத்திற்கு என்ன காரணம்? தற்போது விவாதிக்கப்பட்டு வரும் MCC ஒப்பந்தத்தின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் தயார்ப்படுத்தப்பட்டபோது MCC நிறுவனம், Harvard பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஒத்துழைப்பு மத்திய நிலையம் மற்றும் ச்சரித ரத்வத்தே தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் அணி இணைந்து அறிக்கை ஒன்றைத் தயாரித்தது. 2017 இல் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை தடை பகுப்பாய்வு அறிக்கை என அறிவிக்கப்பட்டது. இந்த அறிக்கையின் பிரகாரம் காணி பிரவேசம், கொள்கைகளின் நிலைப்பாடு, போக்குவரத்திற்காக அதிகளவு எதிர்கொள்ள நேரிடும் தடைகள் என்பன அடையாளம் காணப்பட்டன. MCC நிறுவனத்தின் ஊடாக 480 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை காணி மற்றும் போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக பயன்படுத்த அவர்கள் உத்தேசித்திருந்தனர். அந்த அறிக்கையில் மேலும் சில விடயங்கள் அடையாளம் காணப்பட்டன. மின்சாரமும் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. MCC நிறுவனம் உலகம் முழுதும் நடைமுறைப்படுத்தியுள்ள செயற்றிட்டங்களில் மின்சார விநியோகமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அவர்கள் தற்போதைக்கு நேபாளத்தின் மின்சார உற்பத்தி செயற்றிட்டத்தில் ஈடுபட முயற்சித்து வருகின்றனர். பெபின், லைபீரியா, மலாவி ஆகிய நாடுகளில் MCC நிறுவனங்கள் அவ்வாறான செயற்றிட்டங்களை தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளன. இலங்கையில் தற்போது உத்தேசிக்கப்பட்டுள்ள காணி மற்றும் போக்குவரத்துக் கட்டமைப்புடன் தொடர்புடைய செயற்றிட்டங்களுக்கு எதிரான எதிர்ப்பினால் MCC இணக்கப்பாட்டை மின்சாரத்துறையில் ஈடுபடுத்தும் முயற்சி உள்ளதா எனும் சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.