கடற்பிராந்தியத்தை தொடர்ந்தும் ஆராயும் நிபுணர் குழு

New Diamond: கடற்பிராந்தியத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராயும் நிபுணர் குழு

by Staff Writer 17-09-2020 | 9:47 AM
Colombo (News 1st) தீப்பற்றிய MT New Diamond கப்பல் காணப்பட்ட கடற்பிராந்தியத்தில் சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் விசேட நிபுணர்கள் குழுவினால் தொடர்ந்தும் ஆராயப்படுவதாக கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த கடற்பிராந்தியத்தில் வாழும் மீன்கள், எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்தார். மீன்கள் இறந்திருந்தால் அவை ஏனைய கடற்பிராந்தியங்களுக்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாமென நம்பப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனிடையே, MT New Diamond கப்பலில் பரவிய தீயை கட்டுப்படுத்த செலவிடப்பட்ட தொகை தொடர்பில் மீண்டும் ஆராய்ந்து, சட்ட மா அதிபரிடம் இரண்டாவது அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்தார். தீயை கட்டுப்படுத்த செலவிடப்பட்ட தொகையாக 340 மில்லியன் ரூபாவை, சட்ட மா அதிபர், கப்பலின் உரிமையாளரிடம் இழப்பீடாக கோரியுள்ளார். இது தொடர்பிலான அறிக்கை, தீயை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்ட தரப்பினரால் நேற்று சட்ட மா அதிபரிடம் அறிக்கை கையளிக்கப்பட்டது. MT New Diamond கப்பலின் கெப்டனை சந்தேக நபராக பெயரிட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான அறிவிப்பை பெறுமாறு சட்ட மா அதிபரால் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நேற்று பணிப்புரை விடுக்கப்பட்டது. இந்தநிலையில், கப்பலில் இதுவரை நிறைந்து காணப்பட்ட நீர் வௌியேற்றப்பட்டு வருவதாக கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர குறிப்பிட்டார். கடலில் காணப்பட்ட எண்ணெய் படலத்திலிருந்து பெறப்பட்ட மாதிரிகளை கொண்டு நடத்தப்பட்ட பரிசோதனையில், கப்பலை செலுத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட எரிபொருளே காணப்பட்டமை, அரச இரசாயன பகுப்பாய்வாளரினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையினூடாக உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். எனினும், கப்பலின் உட்பகுதியிலிருந்து பெறப்பட்ட மாதிரிகள் தொடர்பிலான அரச இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கை இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை என கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர மேலும் குறிப்பிட்டார்.