20 ஆவது திருத்தம்: பிரதமரினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைக்கு என்ன நடந்தது?

20 ஆவது திருத்தம்: பிரதமரினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைக்கு என்ன நடந்தது?

எழுத்தாளர் Staff Writer

17 Sep, 2020 | 8:49 pm

Colombo (News 1st) 20 ஆவது அரசியலமைப்புத் திருத்த வரைபு தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமரினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை நேற்றைய (16) அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் அவ்வாறு இடம்பெறவில்லை என அமைச்சர்கள் சிலர் குறிப்பிட்டனர்.

எனினும், இந்த விடயம் தொடர்பில் நேற்று கலந்துரையாடப்பட்டதாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இன்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 19 ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தின் போது, 20 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தத்தை கொண்டு வருவதற்காக அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டது.

ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, நிமல் சிறிபால டி சில்வா, தினேஸ் குணவர்த்தன, உதய கம்மன்பில மற்றும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் அந்தக் குழுவில் அங்கம் வகித்தனர்.

செப்டம்பர் 02 ஆம் திகதி, 20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபு என்ற பெயரில் ஆவணமொன்று சமர்ப்பிக்கப்பட்டதுடன், அது வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டது.

பின்னர் இந்த அரசியல் அமைப்பு திருத்த வரைபில் சில விடயங்கள் தொடர்பில் அமைச்சரவை உறுப்பினர்களும் ஆளும் கட்சியின் சிலரும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

விமர்சனங்களுக்கு மத்தியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ 20 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தத்தை ஆராய குழு ஒன்றை நியமித்தார்.

அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக குறித்த குழு கடந்த 15 ஆம் திகதி பிரதமரிடம் அறிக்கை சமர்ப்பித்ததன் பின்னர் தெரிவித்தது.

எனினும், இந்த விடயம் தொடர்பில் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவில்லை என அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் அமைச்சர்கள் குறிப்பிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்