by Staff Writer 17-09-2020 | 4:17 PM
Colombo (News 1st) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் இலங்கையில் தேடப்பட்ட நிலையில், தமிழகத்தில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்திய மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 05 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து பொலிஸ் கான்ஸ்டபிளிடம் விசாரணை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சப்புகஸ்கந்த, ஹெய்யந்துடுவ பகுதியில் ஹெரோயின் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் தேடப்பட்ட கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் கான்ஸ்டபிள், தமிழகத்தின் தனுஷ்கோடியில் கடந்த 5 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
பிரவீன் குமார பண்டார என்ற குறித்த நபர், கடந்த 6 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, 13 நாட்களுக்கு அவரை சென்னை புழல் சிறையில் அடைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையிலேயே சந்தேகநபர் தொடர்பான விசாரணைகளை இந்திய மத்தியப் புலனாய்வுத்துறையிடம் ஒப்படைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான அங்கொட லொக்காவுடன் பிரவீன் குமார பண்டார தொடர்புகளைப் பேணியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.