ETI, சுவர்ணமஹால் ஃபைனான்சியல் சர்விசஸ் நிறுவனங்களுக்கு நடந்தது என்ன?

by Staff Writer 16-09-2020 | 8:45 PM
Colombo (News 1st) ETI வைப்பீட்டாளர்கள் சிலர் இன்று ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி இன்னும் தமக்கு நியாயம் கிடைக்கவில்லை என தெரிவித்தனர். ETI மற்றும் சுவர்ணமஹால் ஃபைனான்சியல் சர்விசஸ் (Swarnamahal Financial Services) நிறுவனங்களுக்கு உண்மையிலேயே என்ன நடந்தது? இந்த நிறுவனங்களின் உரிமையாளரான EAP வர்த்தகக் குழுமத்திற்கு முதலீட்டாளர் ஒருவர் கிடைத்துள்ளதாக கடந்த அரசாங்கம் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவித்தது. வர்த்தகக் குழுமத்தின் 45 வீத பங்குகளை கொள்வனவு செய்வதற்காக 75 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்யப்படவுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த முதலீட்டிற்கு முன்வந்த ப்ளூ சமிட் கெப்பிட்டல் என்ற நிறுவனம் அதற்கு சில மாதங்களுக்கு முன்னதாக சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. EAP குழுமத்தில் முதலீடு செய்யப்படவுள்ளதாக முதலில் தெரிவிக்கப்பட்டாலும் நட்டம் அடைந்த ETI மற்றும் சுவர்ணமஹால் ஃபைனான்ஸ் ஆகிய நிறுவனங்களை கைவிடுவதற்கு குறித்த முதலீட்டாளர் நடவடிக்கை எடுத்தார். இணக்கம் காணப்பட்ட 75 மில்லியன் டொலரில் ஐந்து மில்லியனுக்கு என்ன நடந்தது என உறுதியாக அறிவிக்கப்படாமை சந்தேகத்தை ஏற்படுத்தும் மற்றுமொரு விடயமாகும். இறுதியில் நிறுவனத்தில் இலாபம் அடைந்த பங்குகளை கைபற்றிய ப்ளூ சமிட் கெப்பிட்டல் என்ற முதலீட்டாளர் தற்போது அந்த பங்குகளை பிறிதொரு நிறுவனத்திடம் கையளித்துள்ளார். வௌிநாட்டு முதலீட்டை நாட்டிற்கு ஈர்க்கும் போர்வையில் இறுதியில் வைப்பீட்டாளர்களை கஷ்டத்தில் தள்ளிய இந்த கொடுக்கல் வாங்கலின் பின்னணியில் பிரபல அரசியல்வாதிகள் சிலரின் பெயர்கள் அடிபட்டன. மக்களின் பணத்தை சூறையாடும் இத்தகைய அரசியல்வாதிகள் தொடர்பில் தற்போதேனும் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் அல்லவா? இதேவேளை, இராஜாங்க அமைச்சரான அஜித் நிவாட் கப்ரால் நேற்று (15) நடைபெற்ற வைபவமொன்றில் யோசனையொன்றை முன்வைத்தார். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வைப்பிலிடும் நிதியில் ஒரு பங்கை இந்நாட்டு பங்குச்சந்தையில் முதலீடு செய்ய மக்கள் முன்வர வேண்டும் என அவர் கூறினார்.