வீதி ஒழுங்கு விதியை மீறினால் 2000 ரூபா அபராதம்

வீதி ஒழுங்கு விதியை மீறினால் அபராதம்: பஸ்கள் இடது பக்கத்தை மாத்திரம் பயன்படுத்த வேண்டுமென அறிவுறுத்தல்

by Staff Writer 16-09-2020 | 5:13 PM
Colombo (News 1st) எதிர்வரும் திங்கட்கிழமை (21) முதல் வீதி ஒழுங்கு விதியை கடுமையாக நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே பொலிஸார் இதனை அறிவித்தனர். பஸ்கள், முச்சக்கரவண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் என்பன ஒரே வழித்தடத்தில் செல்லும் போது கடும் வாகன நெரிசல் ஏற்படுவதாக இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வீதி ஒழுங்கு விதியை முறையாகக் கடைப்பிடிக்குமாறு அனைத்து சாரதிகளிடமும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். விசேடமாக பஸ்கள் பாதையின் இடப்பக்கத்தை மாத்திரம் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, வீதி ஒழுங்கு விதியை மீறும் சாரதிகளுக்கு நாளை (17) முதல் அபராதம் விதிக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இதற்கிணங்க, 2000 ரூபா அபராதம் விதிக்கப்படவுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்தார். இதனிடையே, வீதி ஒழுங்கு விதிமுறையாக பின்பற்றப்படுகின்றதா என்பதை ஆராய இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தெரிவு செய்யப்பட்ட 20 இடங்களில் பொலிஸ் அதிகாரிகளுடன் இராணுவத்தினரும் கடமையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும், வீதி ஒழுங்கு விதி அமுல்படுத்தப்பட்டுள்ள வீதிகளின் நிலையைக் கண்காணிக்க விமானப்படையின் 4 ட்ரோன் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு நகரில் வீதி ஒழுங்கு விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வீதிகளில் இன்று முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்கள்களை இடது பக்க ஒழுங்கில் பயணிக்குமாறு பொலிஸார் ஆலோசனை வழங்கியிருந்தனர். வீதி ஒழுங்கு விதி நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த நேற்றைய தினமும் நேற்று முன்தினமும் ஏற்பட்ட குறைபாடுகளை நிவர்த்திக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.