2 மில்லியன் மரக்கன்றுகளை நடுமாறு ஜனாதிபதி பணிப்பு

நடைபாதைகளில் வாகனங்கள் நிறுத்துவதை தடை செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை

by Staff Writer 16-09-2020 | 9:23 AM
Colombo (news 1st) அனைத்து பிரதான வீதிகளின் இருமருங்குகளிலும் நடைபாதைகளில் வாகனங்களை நிறுத்திவைப்பதை முழுமையாக தடை செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கிராமிய வீதிகள் மற்றும் பிற உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பிலான இராஜாங்க அமைச்சின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நேற்று (15) மாலை இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதற்கான ஆலோசனையை வழங்கியுள்ளார். ஒரு இலட்சம் கிலோமீற்றர் நீளமுடைய கிராமிய வீதிகளை நிர்மாணிக்கும் நடவடிக்கையை 2024 ஆம் ஆண்டில் நிறைவு செய்து பிரதான வீதிக்கட்டமைப்புடன் இணைக்குமாறு அவர் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார். சிறுபாலங்கள், தொங்கு பாலங்களுக்கு மாற்றீடாக புதிய பாலங்களை நிர்மாணிக்குமாறு அவர் ஆலோசனை வழங்கியுள்ளார். கடந்த சில மாதங்களில் 8,000 கிலோமீற்றருக்கும் அதிக நீளமுடைய வீதிகளின் நிர்மாண நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 400 கிலோமீற்றர் தூரமுடைய வீதியின் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீதி நிர்மாணத்தின் போது போதியளவு மண், மணல் ஆகியவற்றை பகிர்ந்தளிக்களுக்கும் பொறுப்பு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பிரதான வீதிகளின் இருமருங்கிலும் பல்வேறு வகையிலான 2 மில்லியன் மரக்கன்றுகளை நடுமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். அத்துடன், நிர்மாண நடவடிக்கைகளுக்கு எவ்வித பாதிப்போ அல்லது தாமதமோ ஏற்பட இடமளிக்கக் கூடாது எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய செய்திகள்