மருத்துவ சபையை கண்காணிக்க குழு நியமனம்

இலங்கை மருத்துவ சபையின் செயற்பாடுகளைக் கண்காணிக்க குழு நியமனம்

by Staff Writer 16-09-2020 | 7:15 PM
Colombo (News 1st) இலங்கை மருத்துவ சபையின் செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்காக ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. விசேட வைத்திய நிபுணர் கலாநிதி ஹேமந்தி பெரேரா, ராகமை மருத்துவப் பீடத்தின் முன்னாள் பீடாதிபதி கலாநிதி பிரஷாந்த விஜேசிங்க, விசேட வைத்திய நிபுணர்களான அனுலா விஜேசுந்தர மற்றும் தர்ஷன சிறிசேன ஆகியோர் கண்காணிப்பு குழுவின் உறுப்பினர்களாவர். மருத்துவ சபையின் செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு ஐவரடங்கிய குழுவை நியமிக்க தீர்மானித்ததாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த குழுவின் ஊடாக 5 விடயங்கள் தொடர்பில் கவனத்திற்கொள்ளப்படுமெனவும் அவர் கூறியுள்ளார். சர்வதேசத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் பலவற்றின் அனுமதி இரத்து செய்யப்பட்ட விவகாரம், வெற்றிடம் காணப்பட்ட மருத்துவ சபையின் பிரதிநிதிகளை நியமிக்கும் வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டமை உள்ளிட்ட மேலும் சில விடயங்கள் தொடர்பிலும் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதனிடையே, குறித்த அறிக்கையை ஆராய்ந்த பின்னர் அது தொடர்பான சுயாதீன அறிக்கையொன்றை தம்மிடம் ஒப்படைக்குமாறு சுகாதார அமைச்சரினால் குறித்த குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.