அரசுடன் இணையுமா முஸ்லிம் காங்கிரஸ்?

by Staff Writer 16-09-2020 | 8:05 PM
Colombo (News 1st) ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமா? ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான நசீர் அஹமட் நேற்று (15) ஏறாவூரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்.
இந்த அரசாங்கத்தில் பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்ற நம்பிக்கை எங்கள் அனைவருக்கும் உள்ளது. ஆகவே, அதிகூடிய நிதி ஒதுக்கீடுகளை பறித்தெடுத்து அவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது
என நசீர் அஹமட் தெரிவித்தார். மேலும், கட்சியின் உயர் பீடத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் அவர் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.
பல விடயங்களை உயர் பீட கூட்டத்தில் கதைத்தோம். எங்களுடைய ஐக்கிய மக்கள் கட்சியில் எங்களுக்கு தேசியப் பட்டியல் இல்லாத குறையை நாங்கள் எல்லொரும் சுட்டிக்காட்டி கவலையடைந்தோம். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற கௌரவ பிரேமதாச அவர்களுடன் எங்களுடைய கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் ஒப்பந்தம் செய்தும், அந்த ஒப்பந்தம் எந்த வித பேச்சுவார்த்தையும் இன்றி மீறப்பட்டுள்ளது. அதனையும் சுட்டிக்காட்டினோம். ஆகவே, நல்ல விடயங்களுக்கு எவ்வாறான இணக்கப்பாடான அரசியலை செய்ய வேண்டும் என்பதிலும் பல கருத்து பரிமாறல்கள் இடம்பெற்றன
அரசாங்கத்துடன் இணைந்துகொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெறுகிறதா என இதன்போது ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நசீர் அஹமட், எவ்வித விட்டுக்கொடுப்பும் இல்லாமல் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கப் போவதாகக் கூறினார். இதேவேளை, பொதுத்தேர்தலுக்கு முன்னர் நியூஸ்லைன் நேர்காணலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் இது தொடர்பில் வினவப்பட்டது. அதற்கு அவர்,
அரசாங்கத்துடன் கொள்கை ரீதியாக இணையும் கௌரவத்தைத் தான் நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அந்தக் காலத்தில் எமக்கு விடுத்த அழைப்புகள் என்பதனை விடவும், எம்மை பலவந்தமாக சேர வைக்கும் அழுத்தங்கள் காரணமாக நாங்கள் சேர வேண்டி ஏற்பட்டது. அவ்வாறு இனியும் ஏற்படுவதற்கு நாங்கள் அனுமதிப்பது அவ்வளவு ஆரோக்கியம் அல்ல
என தெரிவித்திருந்தார்.