விக்னேஸ்வரன் உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கை முடிவிற்குக் கொண்டு வர மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானம்

விக்னேஸ்வரன் உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கை முடிவிற்குக் கொண்டு வர மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

16 Sep, 2020 | 5:23 pm

Colombo (News 1st) மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாமல், நீதிமன்றத்திற்கு களங்கம் ஏற்படுத்தியதாக தெரிவித்து வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை முடிவிற்குக் கொண்டுவர மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பா.டெனிஸ்வரன் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

பதவியில் இருந்து நீக்கப்பட்ட பா.டெனிஸ்வரனை மீண்டும் மாகாண அமைச்சுப் பதவியில் அமர்த்துமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றம் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 29 ஆம் திகதி வட மாகாண முதலமைச்சருக்கு உத்தரவிட்டிருந்தது.

எவ்வாறாயினும், இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த தவறியதன் மூலம் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட பிரதிவாதிகள் நீதிமன்றத்திற்கு களங்கம் ஏற்படுத்தியதாகத் தெரிவித்து வட மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பா.டெனிஸ்வரன் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

பா.டெனிஸ்வரனை மீண்டும் அமைச்சுப் பதவியில் அமர்த்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 29 ஆம் திகதி பிறப்பித்த உத்தரவை ஆட்சேபித்து சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை மீளப் பெறுவதற்கு இணங்கியுள்ளதால், வழக்கை தொடர்ந்தும் நடத்திச் செல்ல எண்ணவில்லை என மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுரேந்திர பெர்னாண்டோ நீதிமன்றத்தில் அறிவித்தார்.

மனுதாரரின் சட்டத்தரணி முன்வைத்த விடயங்களை உறுதிப்படுத்தும் வகையில், சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி கே.கனகீஸ்வரன் முன்வைத்த விளக்கத்தை கருத்திற்கொண்டு வழக்கை முடிவிற்குக் கொண்டுவர மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்