மத்தளையில் விமானத்தரிப்பு கட்டணம் இடைநிறுத்தம்  

மத்தளை விமான நிலையத்தில் விமான தரிப்பு கட்டணம் இடைநிறுத்தம்

by Staff Writer 15-09-2020 | 8:57 AM
Colombo (News 1st) மத்தளை விமான நிலையத்தில் விமானங்களை தரையிறக்குவது மற்றும் விமான தரிப்புக் கட்டணம் ஆகியன ஒரு வருடத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மத்தளை சர்வதேச விமான நிலையத்திற்கு சர்வதேச விமானங்களைக் கொண்டு வரும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் கடந்த 8 ஆம் திகதி வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களில் ஒரு மெற்றிக் தொன் எடைக்கான அதிகபட்ச தரையிறக்கல் கட்டணமாக 4 டொலர்கள் உள்ளன. விமானத்தை தரித்தல் கட்டணம், தரையிறக்கல் கட்டணத்தில் 10 வீதம் என அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் விமான நிலையத்தின் ஏற்றுமதி வரியை 2 வருடங்களுக்கு முற்றாக விலக்களிப்பதற்கு அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டிருந்தது. இது தொடர்பிலான திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக அமைச்சு கூறியுள்ளது.