பயன்படாத வயல் காணிகள் குறித்த தீர்மானம் 

பயன்படாத வயல் காணிகளில் பொருத்தமான அபிவிருத்திகளை மேற்கொள்ள தீர்மானம்

by Staff Writer 15-09-2020 | 2:16 PM
Colombo (News 1st) மீள் பயிர்ச்செய்கை மேற்கொள்ள முடியாத எனினும் வயல் நிலம் என அடையாளம் காணப்படும் இடங்களில் பொருத்தமான அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்காக உரிமையாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்காக முறையான திட்டமொன்றை வகுக்குமாறு, விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா கூறியுள்ளார். தற்போதைய நிலையில் மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களை கருத்திற் கொண்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பணிப்புரையின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தகைய நிலங்களை அடையாளம் காணும் செயற்பாடுகள், பிரதேச மட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் அவை நிறைவடைந்த பின்னர் முறையான திட்டமொன்று வகுக்கப்படுமென விவசாய அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா கூறியுள்ளார். நாட்டில் நிலங்கள் A,B,C எனும் 3 பிரிவுகளின் கீழ் பிரிக்கப்படுகின்றன. A பிரிவின் கீழ் வயல் நிலங்களில் நெற்செய்கை மாத்திரம் மேற்கொள்ளப்படுவதுடன் ஏனைய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான வாய்ப்பு இல்லை என்பதுடன் அவ்வாறு வேறு ஏதேனும் செயற்பாடுகளை முன்னெடுத்தால் அவை சட்டவிரோதமாகும். B பிரிவின் கீழ் வயல் நிலங்களில் ஒருபோக நெற்செய்கை, ஏற்றுமதி பயிர்ச்செய்கை அல்லது மரக்கறி செய்கையை முன்னெடுக்க முடியுமென விவசாய அமைச்சு தெரிவிக்கின்றது. எந்தவொரு செய்கையையையும் முன்னெடுக்க முடியாத நிலங்கள் C பிரிவுக்குள் உள்ளடக்கப்படுவதுடன் அத்தகைய நிலங்களில் பொருத்தமான செய்கைகளை மேற்கொள்வதற்கான அனுமதியை உரிமையாளர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.