2/3 பெரும்பான்மை அரசாங்கம் தொடர்பில் சீனா

2/3 பெரும்பான்மை அரசாங்கம் தொடர்பில் சீனா

by Staff Writer 14-09-2020 | 8:24 PM
Colombo (News 1st) மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டுள்ள அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமையினால், மூலோபாய உறவுகள் மூலம் துரித மற்றும் பரந்தளவில் செயற்படுவதற்கு இதுவொரு சிறந்த சந்தர்ப்பம் என இலங்கைக்கான பதில் சீனத் தூதுவர் ஹூவே இன்று (14) Daily Mirror பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் சீனாவிற்கு இடையிலான உறவுகள் பொருளாதார அபிவிருத்திக்கு மாத்திரம் மட்டுப்படுவதில்லை எனவும் அது மூலோபாயகத்தின் கூட்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலைத்தேய நாடுகள் பிரேரிக்கும் சுதந்திர மற்றும் திறந்த இந்து பசுபிக் கொள்கை தொடர்பில் சீனாவின் எதிர்பார்ப்பு தொடர்பிலும் இங்கு கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கொள்கை தொடர்பில் அவர்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லையென தூதுவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, மக்கள் சீன இராணுவம் தொடர்பில் அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் வருடாந்த அறிக்கை அண்மையில் வௌியிடப்பட்டது. இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் சீனா இராணுவ சேவை விநியோக இடங்களை ஸ்தாபிப்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்மூலம் தூரம் அதிகரித்தாலும் இராணுவ அதிகாரத்தை தக்கவைத்து கொள்வதற்கு சீனாவிற்கு சந்தர்ப்பம் கிடைப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இந்து பசுபிக் பிராந்தியத்தில் தற்போது 3 இலட்சம் அமெரிக்க இராணுவ துருப்புக்கள் செயற்படுவதாக இலங்கைக்கான பதில் சீனத் தூதுவர் Daily Mirror பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். தற்போதும், அமெரிக்காவிற்கு இந்து சமுத்திர வலயத்தில் இராணுவ முகாம்கள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சீனாவிற்கு இந்த வலயத்தில் இராணுவ முகாம்களோ அல்லது பிராந்தியங்களோ இல்லையென பதில் சீனத் தூதுவர் ஹூவே தெரிவித்துள்ளார். சுதந்திரமான திறந்த பிராந்தியத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது யார் என வினவியுள்ள சீனாவின் பதில் தூதுவர், பிராந்தியம் தொடர்பில் அதிகம் யார் பாடுபடுவதற்கு நேரிட்டுள்ளது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.