யாழ். பொம்மைவௌி மக்களின் ஆர்ப்பாட்டம் தொடர்பில் ஆராய பிரதமர் நடவடிக்கை 

by Staff Writer 14-09-2020 | 7:40 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - பொம்மைவெளி பகுதியில் வீடமைப்பு திட்டத்தை பெற்றுத் தருமாறு வலியுறுத்தி நேற்றைய தினம் (13) நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் குறித்து ஆராய்வதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நடவடிக்கை எடுத்துள்ளார். வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்தவை குறித்த பகுதிக்கு சென்று விடயங்களை ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று (14) உத்தரவிட்டுள்ளார். பொம்மைவெளி பகுதியில் வெள்ளப் பெருக்கு அபாயம் தொடர்ச்சியாக காணப்படுவதாகவும் தமக்கான வீடமைப்பு திட்டத்தை அமைத்து தர நடவடிக்கை எடுக்குமாறும் கோரி அந்த பிரதேசத்தில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தனர். இதன்போது, பதாகையொன்றை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுவனின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது. இந்த புகைப்படத்தை நேற்றைய தினம் பார்வையிட்ட பிரதமர், குறித்த பிரச்சினை தொடர்பில் உடனடியாக ஆராயுமாறு விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்தவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து, இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டு, குறித்த பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்ததாக பிரதமர் ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.