நாட்டில் மற்றொரு கொரோனா மரணம் பதிவாகியது

by Staff Writer 14-09-2020 | 4:30 PM
Colombo (News 1st) நாட்டில் 13 ஆவது கொரோனா மரணம் இன்று (14) பதிவாகியுள்ளது. கடந்த 02 ஆம் திகதி பஹ்ரைனில் இருந்து நாடு திரும்பிய ஒருவரே உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஒழிப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். கப்பல் பணியாளராக இருந்த 60 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவருக்கு நாடு திரும்பிய சந்தர்ப்பத்தில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படாத நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். அவர் கடந்த 09 ஆம் திகதி புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மாரடைப்பினால் அவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 39 பேர் நேற்று (13) அடையாளம் காணப்பட்டனர். தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களுக்கே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3,235 ஆக அதிகரித்துள்ளது.