டெஸ்மன்ட் சத்துரங்கவின் விளக்கமறியல் நீடிப்பு

ஊடகவியலாளர் டெஸ்மன்ட் சத்துரங்கவின் பிணை விண்ணப்பம் நிராகரிப்பு 

by Staff Writer 14-09-2020 | 4:13 PM
Colombo (News 1st) நீதிமன்றம் மற்றும் நீதிமன்ற செயற்பாடுகளுக்கு அவதூறு ஏற்படும் வகையிலும் இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் இணையத்தளத்தினூடாக செய்தி வௌியிட்டதாக கூறி கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் டெஸ்மன்ட் சத்துரங்க டி அல்விஸின் பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இணையத்தள ஊடகவியலாளர் டெஸ்மன்ட் சத்துரங்க டி அல்விஸின் பிணை விண்ணப்பம், கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் இன்று (14) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது பிணை கோரிக்கையை நிராகரித்த மேலதிக நீதவான், அவரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். மேலும், டெஸ்மன்ட் சத்துரங்க டி அல்விஸினால் செய்தியை வௌியிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட மடிக்கணினியையும் 02 தொலைபேசிகளையும் அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கை தயாரிக்குமாறும் கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகேவால் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்போது, ஊடகவியலாளரால் அவருக்கு சொந்தமான இணையத்தள பக்கத்திற்குள் பிரவேசிப்பதற்கான கடவுச்சொல் மாற்றப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று மன்றில் தெரிவித்தனர். இதனால், குறித்த இணையத்தள பக்கத்திற்குள் தம்மால் பிரவேசிக்க முடியாதுள்ள நிலையில், தமது விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கணினி விசாரணைப்பிரிவின் தலைமையதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ்.கே. சேனாரத்ன மன்றில் குறிப்பிட்டார்.