வீதி ஒழுங்கு விதிமுறைகள் நாளை முதல் மீண்டும் அமுல்

வீதி ஒழுங்கு விதிமுறைகள் நாளை முதல் மீண்டும் அமுல் 

by Staff Writer 13-09-2020 | 5:59 PM
Colombo (News 1st) வீதி ஒழுங்கு விதிமுறைகள் நாளை (14) முதல் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளன. இதனடிப்படையில், நாளை முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மேல் மாகாணத்தின் பல வீதிகளில் வீதி ஒழுங்கு விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. மேல் மாகாணத்தில் கொழும்புக்குள் பிரவேசிக்கும் ஶ்ரீஜயவர்தனபுர வீதியின் பொல்துவ சந்தியில் இருந்து ஹோட்டன் சுற்றுவட்டம் வரையிலும் பேஸ்லைன் வீதியின் களனி பாலம் முதல் ஹைலெவல் வீதி, பேஸ்லைன் வீதி மற்றும் ஹைலெவல் வீதியின் அநுர வித்தியாலத்திற்கு அருகில் இருந்து ஶ்ரீ சம்புத்த ஜயந்தி மாவத்தை வரையில் தும்முல்ல சுற்றுவட்டம், தர்ஸ்ட்டன் வீதி, மார்க்கஸ் பெர்னாண்டோ மாவத்தை, பொது நூலக சந்தி, ஆனந்த குமாரசாமி மாவத்தை, பித்தளை சந்தி வரையிலான வீதியிலும் காலி வீதியின் வில்லியம் சந்தி முதல் காலிமுகத்திடல் சுற்றுவட்டம் வரையான 4 வீதிகளில் நாளை முதல் வீதி ஒழுங்கு விதி அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார். கொரோனா நிலைமையை அடுத்து, வீதி ஒழுங்கு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை எனவும் அதனால் சாரதிகளுக்கு மீளவும் நினைவுப்படுத்தும் வகையில் எதிர்வரும் புதன்கிழமை வரை இந்த நடைமுறையை ஆரம்பித்து, தொடர்ச்சியாக கடைப்பிடிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுட்டிக்காட்டியுள்ளார்.