கட்சியிலிருந்து சுமந்திரன் நீக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி கடிதம்

கட்சியிலிருந்து சுமந்திரன் நீக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி கடிதம்

கட்சியிலிருந்து சுமந்திரன் நீக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி கடிதம்

எழுத்தாளர் Staff Writer

13 Sep, 2020 | 8:28 pm

Colombo (News 1st) இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என கட்சியின் கொழும்பு கிளை தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவரும் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானத்திற்கு அவர் இது தொடர்பில் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

10 வருடங்களாக கட்சியின் கொழும்பு கிளையை சொந்த நிதியிலேயே நடத்திவரும் தமக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் இருப்பை பாதிக்கும், செயற்பாடுகளை சுட்டிக்காட்ட வேண்டிய தார்மீக கடப்பாடு உள்ளதாக கே.வி. தவராசா தெரிவித்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் கட்சி பாரிய பின்னடைவை சந்தித்தமைக்கு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் தான்தோன்றித்தனமான முடிவுகள் காரணமாக அமைந்ததாக அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்க வேண்டிய பல காரணங்களையும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

(1) 2015 ஆம் ஆண்டின் நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட அரசமைப்பு விவகாரம்

(2) தமிழ் தேசிய கொள்கை நீக்கல் அரசியல்

(3) ஆயுதப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் கருத்துகள்

(4) தமிழ் ஊடகங்கள் மீது அவதூரான கருத்துகள்

(5) இனப்படுகொலை – சர்வதேச விசாரணை முடிந்து விட்டது என கூறியமை

(6) ஜெனிவா விவகாரங்களை கையாண்ட முறை

(7) கடும் அரச ஆதரவோடு தேசிய அரசியலுக்கு கொடுக்கப்பட்ட முன்னுரிமையை தமிழ் தேசிய அரசியலுக்கு வழங்கத் தவறியமை

(8) அரசியல் கைதிகள், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை கையாண்ட விதம்

ஆகியவற்றை பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிரான குற்றச்சாட்டுகளாக அவர் முன்வைத்துள்ளார்.

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கையில் அமைச்சுப் பதவி தொடர்பில் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்த கருத்துகள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் பெரும் சரிவை ஏற்படுத்தியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

எவ்வாறாயினும் தேர்தல் முடிவடைந்த பின்னர் கட்சித் தலைமை மீது மிகமோசமான விமர்சனங்களை அவர் முன்வைத்ததாகவும் கே.வி. தவராசா தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சி கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட வேண்டுமென்ற கோரிக்கை மேலோங்கியபோது எம்.ஏ. சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுக்கு ஆதரவை வெளிப்படுத்தியதாகவும் அவரது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தால் தமிழரசுக் கட்சிக்கு மேலும் ஒரு பாராளுமன்ற ஆசனம் கிடைத்திருக்கலாம் அல்லது நிச்சயமாக தேசியப் பட்டியலில் ஒரு ஆசனத்தை பெற்றிருக்கலாம் என கே.வி. தவராசா தெரிவித்துள்ளார்.

அரசியல் ரீதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை நிலைநிறுத்தும் பல்வேறு முக்கிய தீர்க்கமான தருணங்களில் எட்டப்பட்ட பொருத்தமற்ற முடிவுகள் தொடர்பில் கவனத்திற் கொள்ளுமாறும் சி.வி.கே. சிவஞானத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் தலைமைத்துவம் உடனடியாக செயல்படாவிடின் ஜக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமையை விட மிக மோசமான நிலைமை தமிழரசுக் கட்சிக்கு ஏற்படுத்தப்பட்டு தமிழும் தேசியமும் அழிக்கப்பட்டுவிடும் என சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்