20 ஆவது திருத்தம் தொடர்பில் புதிய வர்த்தமானி அறிவித்தலை வௌியிட தீர்மானம்

by Bella Dalima 12-09-2020 | 8:55 PM
Colombo (News 1st) புதிய அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தில் காணப்படும் பிரச்சினைகள் காரணமாக 20 ஆவது திருத்தம் தொடர்பிலான புதிய வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,
கட்சித் தலைவர்கள் கூட்டத்தை பிரதமர் கூட்டினார். அதன்போது தற்போது முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூலத்தில் காணப்படும் சில பிரச்சினைகள் தொடர்பில் நானும் மேலும் சில கட்சித் தலைவர்களும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். அந்த கலந்துரையாடலுக்கு பின்னர் நீதியமைச்சருடன் கலந்துரையாடுவது என நாம் தீர்மானித்தாலும், அதனை செய்ய முடியாமற்போனது. குழுவொன்றை நியமித்து அந்தக் குழுவின் பரிந்துரைகள் கிடைக்கும் வரை 20 ஆவது திருத்தத்திற்கு தற்போது வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்காது இருப்பதற்கும், அந்தக் குழுவின் பரிந்துரைகளை ஆராய்ந்து புதிய வர்த்தமானி அறிவித்தலை சமர்ப்பித்து அதனை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது
கொஸ்கம பகுதியில் இன்று இடம்பெற்ற கட்சிக்கூட்டத்தின் பின்னர் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.