by Staff Writer 12-09-2020 | 8:35 PM
Colombo (News 1st) 2015 ஆம் ஆண்டு அரசியல் பிரதிநிதிகள் சிலர் சஹரான் ஹாசிமுடன் நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்ட காணொளி குறித்த தகவல்கள் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முதன்முறையாக தெரியவந்துள்ளது.
இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்த அரசியல் பிரதிநிதிகளில் ஒருவர் ஆணைக்குழு முன்னிலையில் இன்று ஆஜரானபோது இந்த காணொளி தொடர்பில் தெரியப்படுத்தினார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிப்பதற்காக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தில் 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் களமிறங்கி தோல்வியடைந்த வேட்பாளரான மொஹமட் முஸ்தபா அப்துல் ரஹ்மான் நேற்றிரவு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இதன்போது, சாட்சியாளரான அப்துல் ரஹ்மான் மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஷிப்லி ஃபாருக் ஆகியோருடன் ஏப்ரல் 21 தொடர் தாக்குதலை நடத்திய சஹ்ரான் ஹாசிம் இணைந்து கலந்துரையாடலில் ஈடுபட்ட காணொளி ஜனாதிபதி ஆணைக்குழுவில் காட்சிப்படுத்தப்பட்டது.
இந்த காணொளியில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஷிப்லி ஃபாருக் மற்றும் சாட்சியாளரான அப்துல் ரஹ்மானுக்கு முன்பாக சஹரான் ஹாசிமும் அவரின் மனைவி செயினி மொஹமட்டும் உள்ளனர்.
சுமார் 30 நிமிட காணொளியின் குறித்த ஒரு பகுதி மாத்திரம் சாட்சியாளரினால் ஆணைக்குழு ஊடாக காட்சிப்படுத்தப்பட்டது.
இந்த கலந்துரையாடலுக்கு அமைய, ஹிஸ்புல்லாவிற்கு அரபு நாடொன்றிலிருந்து சுமார் 01 மில்லியன் ரியால் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் சஹரான் ஹாசிம் மற்றும் ஷிப்லி ஃபாருக் ஆகியோரிடையே உரையாடல் இடம்பெறுவதுடன், குறித்த பணம் ஹிஸ்புல்லாவின் அரசியல் செயற்பாடுகளுக்காக அரபு நாட்டிலிருந்து வழங்கப்பட்டுள்ளதா அல்லது ஹீரா மன்றத்திலிருந்து வழங்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பிலும் நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, ஷிப்லி ஃபாருக்குடன் சஹரான் ஹாசிமை சந்தித்தமைக்கான காரணம் தொடர்பில் சாட்சியாளரிடம் அரச தரப்பு சிரேஷ்ட சட்டத்தரணி வினவினார்.
இந்த கலந்துரையாடல் சஹரானின் அலுவலகத்தில் இடம்பெற்றதாகவும் இதுவொரு அரசியல் தொடர்பான கலந்துரையாடலெனவும், இந்த கலந்துரையாடல் தமது நினைவிற்கு அமைய 2015 பொதுத்தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் இடம்பெற்றதாகவும் சாட்சியாளர் தெரிவித்தார்.