ஹம்பாந்தோட்டை உத்தேச யானை முகாமைத்துவ சரணாலயத்தில் பாரிய காடழிப்பு

by Staff Writer 11-09-2020 | 8:07 PM
Colombo (News 1st) ஹம்பாந்தோட்டை உத்தேச யானை முகாமைத்துவ சரணாலயத்தின் ஒரு பகுதியில் பாரியளவு காடழிப்பு இடம்பெற்று வருகின்றது. ஒருவரது அத்துமீறிய பயிர் செய்கைக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் யானை - மனித மோதலை குறைப்பதற்காக 2009 ஆம் ஆண்டு இந்த உத்தேச யானை முகாமைத்துவ சரணாலயம் ஒதுக்கப்பட்டது. நீண்டகாலமாக இந்த வனப்பகுதி அழிக்கப்பட்டு வந்ததாக பிரதேச வாசிகள் தெரிவித்தனர். வன விலங்குகளுக்கான அரச காணிகளை அத்துமீறி கையகப்படுத்துகின்ற பல்வேறு தரப்பினர் தொடர்பில் ஹம்பாந்தோட்டை மாவட்ட இணைப்புக்குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. நீண்ட காலமாக பயிர்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு நிலங்களை வழங்க வேண்டும் என ஹம்பாந்தோட்டை அரசியல் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலின் போது கோரிக்கை விடுத்தனர். நிலைமை இவ்வாறு இருக்கும் போது, ஹம்பாந்தோட்டை இடது கரை வலயத்தில் உள்ள மகாவலிக்கு சொந்தமான நிலங்களில் உள்ள வாழைச்செய்கையை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். சட்டவிரோதமாக செய்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படும் குறித்த இடத்தை வேறு நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கான முயற்சி இடம்பெறுகின்றது.