தென் ஆபிரிக்க கிரிக்கெட் நிறுவனம் குறித்து விசாரணை

தென் ஆபிரிக்க கிரிக்கெட் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை

by Staff Writer 11-09-2020 | 9:16 PM
Colombo (News 1st) தென் ஆபிரிக்க விளையாட்டு சம்மேளனம், தென் ஆபிரிக்க ஒலிம்பிக் குழு, தென் ஆபிரிக்க கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரிகளை நிர்வாக செயற்பாடுகளிலிருந்து நீங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆபிரிக்க கிரிக்கெட் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, பரிந்துரைகள் ஒரு மாத காலத்திற்குள் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. தென் ஆபிரிக்க கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகத்தில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றதன் காரணமாகவே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நிறுவனத்தின் பதில் நிறைவேற்று அதிகாரியை சேவையிலிருந்து விலகுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் தென் ஆபிரிக்க கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் காரணமாக மேற்கொள்ளப்பட உள்ளக கணக்காய்வு அறிக்கையின் பின்னர் கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் தபன் மோரு அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். தென் ஆபிரிக்க விளையாட்டு சமமேளனமும் தேசிய ஒலிம்பிக் குழுவின் உறுப்பினர்களும் கடந்த செவ்வாய்க்கிழமை கூடிய போது தென் ஆபிரிக்க கிரிக்கெட் நிறுவனம் தொடர்பாக விசாரணை நடத்த ஏகமனதாக தீர்மானித்தனர். உள்ளகக் கணக்காய்வின் முழுமையான அறிக்கையை தென் ஆபிரிக்க ஒலிம்பிக் குழு கோரிய சந்தர்ப்பத்தில் தென் ஆபிரிக்க கிரிக்கெட் அதிகாரிகள் அதனை நிராகரித்ததுடன், அதுவே இந்த விசாரணை ஆரம்பிக்கப்படுவதற்கான பிரதான காரணமாக அமைந்தது. எனினும், தென் ஆபிரிக்க விளையாட்டு சம்மேளனம் மற்றும் தேசிய ஒலிம்பிக் குழுவின் தலையீட்டை தாம் ஏற்கமாட்டோம் என தென் ஆபிரிக்க கிரிக்கெட் நிறுவனம் கூறியுள்ளது. இது தொடர்பாக சட்ட ஆலோசனைகளைப் பெறவுள்ளதாக தென் ஆபிரிக்க கிரிக்கெட் நிறுவனம் தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும், தென் ஆபிரிக்க கிரிக்கெட் நிறுவனத்தின் செயற்பாடுகளைத் தடுப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சட்ட விதிகளுக்கு முரணானதா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.