ரணிலின் ஊழல் ஒழிப்பு செயலகத்தில் பாரிய ஊழல்: 3 வருடங்களில் 3 கோடி ரூபா செலவு

ரணிலின் ஊழல் ஒழிப்பு செயலகத்தில் பாரிய ஊழல்: 3 வருடங்களில் 3 கோடி ரூபா செலவு

ரணிலின் ஊழல் ஒழிப்பு செயலகத்தில் பாரிய ஊழல்: 3 வருடங்களில் 3 கோடி ரூபா செலவு

எழுத்தாளர் Staff Writer

11 Sep, 2020 | 8:54 pm

Colombo (News 1st) 2015 ஆம் ஆண்டிற்கு முன்னரான ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை கண்டறிவதற்காக அதே வருடத்தில் நியமிக்கப்பட்ட ஊழல் ஒழிப்பு குழு செயலகம் 03 வருடங்களுக்குள் 3,37,14,807 ரூபாவினை செலவிட்டுள்ளமை இன்று தெரியவந்துள்ளது.

செலவுகள் தொடர்பில் பிரதமர் அலுவலகத்தினால் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையினூடாக இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இந்த அறிக்கையின் பிரகாரம், 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி முதல் டிசம்பர் வரையிலான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள், தொலைபேசி, மின்சாரம், நீர் கட்டணங்கள், மேலதிக மற்றும் விடுமுறைகளுக்கான கொடுப்பனவுகள், வாகன திருத்தப்பணிகள் மற்றும் ஏனைய விடயங்களுக்காக மொத்தமாக 1,34,32,283 ரூபா பணம் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளுக்காக 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் அதே வருடம் டிசம்பர் வரை 1,40,66,507 ரூபா செலவிடப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் ஜூன் மாதம் வரை 62,16,016 ரூபா செலவிடப்பட்டுள்ளது.

ஊழல் ஒழிப்பைக் கண்டறிய செயற்பட்ட இடத்திலேயே பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளதாக, இந்த தகவல்கள் அடங்கிய அறிக்கை ஜனாதிபதி ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், அதன் தலைவர் நீதிபதி உபாலி அபேரத்னவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொய்களை வௌிக்கொணர்வது முக்கியம் என்பதனால், அந்த அறிக்கையை ஊடகங்களுக்கு வழங்குமாறும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில் ஸ்தாபிக்கப்பட்ட ஊழல் ஒழிப்பு குழு செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட சில செயற்பாடுகள் சட்டத்திற்கு முரணாக இடம்பெற்றுள்ளதாக, கடந்த 04 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சி வழங்கிய முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.

குறித்த நிறுவனம் சட்டத்திற்குட்பட்டு ஸ்தாபிக்கப்பட்ட ஒன்றல்லவெனவும் அவர் கூறியிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க, ராஜித சேனாரத்ன, பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் உள்ளிட்டோருடன் தாமும் ஊழல் ஒழிப்பு குழு செயலகத்தின் உறுப்பினர்களாக அங்கம் வகித்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

பாரியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் ஊழல் மற்றும் மோசடிகளுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக தண்டனை வழங்க, ஊழல் ஒழிப்பு குழு செயலகத்திற்கு முடிந்ததா?

இந்தக் கேள்விக்கு பதில் நாட்டு மக்களுக்கு சிறந்த முறையில் புலப்பட்டுள்ளது.

திருடர்களைக் கண்டுபிடிப்பது எவ்வாறாக இருந்தாலும், இந்தக் குழு மூன்று வருடங்களில் நாட்டு மக்களின் மூன்று கோடி ரூபாவிற்கும் அதிக பணத்தை செலவிட்டுள்ளமை தற்போது தௌிவாகியுள்ளது.

இதேவேளை, FCID-யினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை மற்றும் அந்த நிறுவனம் எடுத்த தீர்மானங்கள் சட்டத்திற்கு முன்பாக அதிகாரமற்றது என அரசியல் பழிவங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று அறிவித்தது.

திவிநெகும அபிவிருத்தித் திணைக்களத்தின் முன்னாள் மேலதிக பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி இன்று ஆணைக்குழுவில் சாட்சியமளித்த போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 55 ஆம் சரத்தின் கீழ் பொலிஸ் மா அதிபருக்கு இவ்வாறான விசேட பொலிஸ் பிரிவொன்றை ஸ்தாபிக்கும் இயலுமை உள்ளதா என ஆணைக்குழு சாட்சியாளரிடம் வினவியது.

பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 55 ஆம் பிரிவின் கீழ் அவ்வாறு செய்ய முடியாது என சாட்சியாளர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் கீழ் நிதி விசாரணைப் பிரிவை ஸ்தாபித்தல், நியமனங்களை வழங்கல் சட்டபூர்வமானதா என ஆணைக்குழு மீண்டும் வினவியுள்ளது.

அது சட்டபூர்வமானதல்ல என இதன்போது பந்துல திலகசிறி பதிலளித்துள்ளார்.

அதன்படி, நல்லாட்சி அரசாங்க காலத்தில் தன்னை கைது செய்து சிறையில் அடைத்து, தொழிலை இழக்கச் செய்து, பாதிப்படையச் செய்தமை அரசியல் நோக்கத்தில் இடம்பெற்றுள்ளதாக பந்துல திலகசிறி மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்