20 ஆவது திருத்தம்: ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவருக்கு கடிதம்

by Staff Writer 10-09-2020 | 8:03 PM
Colombo (News 1st) 20 ஆவது திருத்தத்தின் சில ஏற்பாடுகள் மூலம், நீதிமன்ற சுயாதீனம், சட்டத்தரணி தொழிலுக்கு அழுத்தம் ஏற்படக்கூடும் என சுட்டிக்காட்டி, ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். உயர் நீதிமன்ற நீதியரசர்களை நியமிக்கும்போது, சபாநாயகர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றக் குழுவின் கண்காணிப்புடன் மாத்திரம் குறித்த செயற்பாடு மட்டுப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் நடவடிக்கைகளை, அடிப்படை உரிமை மீறல் மனு மூலம் சவாலுக்கு உட்படுத்துவதற்கு மக்களுக்கிருந்த சந்தர்ப்பம் அற்றுப்போவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனை சட்டமாக்குவதற்கு முன்னர், நீதிமன்றம் மற்றும் சட்டத்தரணி தொழிலுக்கு அழுத்தம் ஏற்படக்கூடிய விடயங்கள் தொடர்பில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு, குறித்த தரப்பினரிடம் கேட்க வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.