எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடக்கூடாது: இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடக்கூடாது: இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

10 Sep, 2020 | 6:30 pm

Colombo (News 1st) தமிழகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடக்கூடாது என இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் மீனவ சங்கத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடனான விழிப்புணர்வு கூட்டம் நேற்று (09) மாலை இடம்பெற்றது.

எக்காரணம் கொண்டும் எல்லை தாண்டி செல்லக்கூடாது எனவும் மீன் பிடித்துக்கொண்டிருக்கும் போது ஏதேனும் விபத்துகள் ஏற்படின் கடற்படை, கடலோர காவல்படைக்கு அறிவிக்க வேண்டும் எனவும் இந்த கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எல்லை தாண்டி சென்றால் மாத்திரமே மீன் கிடைப்பதாகவும் மீன் சந்தைப்படுத்தலில் இன்னல்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் இராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் கடலோர காவல்படை அதிகாரி, கடற்படை, விமானப் படை அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை, இலங்கை கடல் வளத்தை சுரண்டி அழிக்கும் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய செயற்பாடுகளைக் கண்டித்து, மன்னார் – பேசாலை கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்