MT New Diamond கப்பலுக்குள் வௌிநாட்டு நிபுணர்கள் பிரவேசம்

by Staff Writer 09-09-2020 | 7:30 PM
Colombo (News 1st) MT New Diamond கப்பலில் மீண்டும் பரவிய தீ கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதை அடுத்து, மீட்புக் குழுவின் மூன்று வௌிநாட்டு நிபுணர்கள் இன்று முற்பகல் கப்பலுக்குள் பிரவேசித்தனர். கப்பல் ஆழமான கடற்பரப்பை நோக்கி தொடர்ந்தும் இழுத்துச் செல்லப்படுவதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா கூறினார். கப்பலில் ஏற்பட்ட தீயினால் காயமடைந்து கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பொறியியலாளரின் உடல் நிலை தேறியுள்ளது. அவர் தனது அனுபவத்தை பின்வருமாறு பகிர்ந்துகொண்டார்.
 எனக்கு நினைவுள்ள வகையில், செப்டம்பர் 3 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றது. காலை 7 மணிக்கு எழுந்தவுடன் நேரடியாக காலை உணவை பெறுவதற்காக சமையலறைக்கு சென்றேன். அங்கு எனது நண்பர்களுடன் சிறிது நேரம் கதைத்துக் கொண்டிருந்தேன். சுமார் 15 நிமிடங்களுக்கு பின்னர் நான் குளியலறைக்கு சென்றேன். நான் குளித்துவிட்டு வௌியே வரும்போது பாரிய வெடிச்சம்பவம் இடம்பெற்றது. அவ்வளவு தான் எனக்கு வேறு எதுவும் நினைவில் இல்லை. வெடிப்பின் பின்னர் யாரோ என்னை தாக்குவதைப் போன்று உணர்ந்தேன். அப்போது கப்பலின் சில பகுதிகளுக்கு சேதம் ஏற்பட்டிருப்பதைக் கண்டேன்
MT New Diamond கப்பல் தற்போது இலங்கைக்கு சுமார் 40 தொடக்கம் 41 கடல் மைல் தொலைவில் உள்ளது. இந்த கப்பலில் பற்றிய தீ கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதை அடுத்து, இன்று அதிகாலை ஒரு மணியளவில் நீர் விசுறும் நடவடிக்கை நிறுத்தப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா கூறினார். கப்பலுக்கு பின்னாலுள்ள கடற்பரப்பில் எண்ணெய் படர்ந்துள்ளதை விமானப் படையினர் இன்று காலை அவதானித்தனர். கடலில் படர்ந்துள்ள எண்ணெய் காரணமாக சமுத்திர சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்காக நேற்று முதல் இந்திய கரையோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான ட்ரோனியர் ரக விமானம் இரசாயனம் விசுறும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது. ​ இதேவேளை, சமுத்திர சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை பெற்றுக்கொண்ட மாதிரிகளை அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்குமாறு சட்ட மா அதிபர் அதிகார சபைக்கு இன்று அலோசனை வழங்கினார்.