மக்கள் சக்தி குழுவினரின் 12 ஆம் நாள் பயணம்

by Staff Writer 09-09-2020 | 9:43 PM
Colombo (News 1st) மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் செயற்றிட்டத்தின் 12 ஆம் நாள் இன்றாகும். கவனிப்பாரற்ற நிலையிலுள்ள பின்தங்கிய கிராமங்களின் இல்லங்கள் தோறும் சென்ற மக்கள் சக்தி குழாத்தினர் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இன்றும் கேட்டறிந்து கொண்டனர். மக்கள் சக்தி குழாத்தினர் மன்னார் , அனுராதபுரம் , காலி மாவட்டங்களுக்கு இன்று விஜயம் செய்திருந்தனர். ஐந்தாவது கட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் செயற்றிட்டத்துடன் பேராதனை பல்கலைக்கழகத்தினரும் இணைந்துள்ளனர். மன்னார் மடு பிரதேச செயலகத்திற்குட்பட்ட தேக்கம் கிராமத்திற்கு இன்று காலை மக்கள் சக்தி குழுவினர் சென்றிருந்தனர். யானை அச்சுறுத்தல், குடிநீர் பிரச்சினை தொடர்பில் அங்குள்ள மக்கள் விசனம் தெரிவித்தனர். மடு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சோதி நகரிலுள்ள பாடசாலையொன்றில் தரம் 5 வரையிலுமே கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக மக்கள் இதன்போது தெரிவித்தனர். மாணவர்கள் ஐந்தாம் தரத்திற்கு மேல் கல்வியைத் தொடர வேண்டுமாயின், சோதி நகரிலிருந்து 12 கிலோமீட்டர் பயணித்து கட்டையடம்பன் முருங்கன் மத்திய மகா வித்தியாலயத்திற்கே செல்ல வேண்டியுள்ளது. அத்துடன், விக்குமபுர கிராமத்தில் உள்ள 24 குடும்பங்களும் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். மன்னார் - புதுக்குடியிருப்பு கிராமத்தில் உள்ள 44 குடும்பங்களும் தமது நீர்த் தேவைக்காக ஒரேயொரு கிணறையே நம்பியுள்ளனர். மன்னார் - பேசாலை 4 ஆம் வட்டாரப் பகுதிக்கு விஜயம் செய்த மற்றைய குழுவினர் வறுமைக்கோட்டின் கீழ் வாழும், மீன்பிடியையும் கூலித் தொழிலையும் வாழ்வாதாரமாகக் கொண்ட மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொண்டனர். காட்டாஸ்பத்திரி கிராமத்தில் உள்ள குழந்தைகளின் போஷாக்கின்மை தொடர்பிலும் மக்கள் சக்தி குழாத்தினர் செவிமடுத்தனர். சிறுதோப்பு கிராமத்தில் உள்ள மக்கள் நாளாந்த வருமானத்தை பெற்றுக்கொள்வதற்கான தொழில் வாய்ப்பின்றி அல்லலுறுகின்றனர். சின்னக்கரிசல் கிராம மக்கள் பணம் செலுத்தியே குடிநீரைப் பெற வேண்டியுள்ளது. காலி மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள மக்கள் சக்தி குழாத்தினர், அக்மீமன பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட ஜனபத கிராமத்திலுள்ள சுமார் 200 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கடந்த 18 வருடங்களாக காணி உறுதிப்பத்திரம் இன்றி வாழ்வியலை முன்னெடுத்து வருவதைக் கண்ணுற்றனர். அநுராதபுரம் - நொச்சியாகமயிலுள்ள மக்கள் குடிநீரைப் பெறுவதில் சவால்களை எதிர்நோக்கி வருகின்ற நிலையில், அதிகளவிலானோர் சிறுநீரக நோய்த் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர். பணம் செலுத்தியே குடிநீரைப் பெறும் துர்ப்பாக்கிய நிலையை நொச்சியாகம மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர். இதேவேளை, மாத்தளை - பிட்டகந்த கனிஷ்ட வித்தியாலயத்திற்கான குடிநீர் திட்டம் மக்கள் சக்தி குழாத்தினரால் இன்று மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.