ஓரிரவு பெய்த மழையால் வௌ்ளத்தில் மூழ்கியது கொழும்பு

by Staff Writer 09-09-2020 | 8:18 PM
Colombo (News 1st) இன்று காலை 8.30 மணி வரையான 24 மணித்தியாலங்களில் கொழும்பில் 150 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவானது. கொழும்பு கோட்டை, இரத்மலானை ஆகிய பகுதிகளில் 141 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவானது. வெல்லம்பிட்டி - வென்னவத்த, மூன்றாம் ஒழுங்கையில் அமைந்துள் சில வீடுகள் இன்று காலை வெள்ளத்தில் மூழ்கியிருந்தன. அங்கொட, கொதடுவ, தெமட்டகொடை ஆகிய பகுதிகளும் வௌ்ள நீரால் மூழ்கியிருந்தன. கொழும்பு பல்கலைக்கழக வளாகமும் கொழும்பு BRC மைதானமும் நீரில் மூழ்கியுள்ளதுடன், கொழும்பு தாமரைத் தடாகத்தின் வாகனத் தரிப்பிடத்திலும், அதனை சூழவுள்ள வீதிகளிலும் மரங்கள் முறிந்து வீழ்ந்தமையாலும் வெள்ளநீர் தேங்கியதாலும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது. கிராண்ட்பாஸ், ஆமர் வீதி உட்பட கொழும்புக்குள் பிரவேசிக்கும் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் இன்று காலை கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. மழையால் கொழும்பு மாவட்டத்தின் 8 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 5,507 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. திம்பிரிகஸ்யாய, கொலன்னாவ, ஜயவர்தனபுர, மொரட்டுவை, கொழும்பு, கடுவலை சீதவாக்க, மஹரகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர். ஜயவர்தனபுர பிரதேச செயலாளர் பிரிவில் 285 குடும்பங்கள் பாதுகாப்பான இரண்டு பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத் தெரிவித்தார். அவர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதிக மழை காரணமாக கொழும்பு மாவட்டத்தில் 137 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்தார். கொழும்பு நகரத்தையும் சன நடமாட்டம் கூடிய பகுதிகளையும் அண்மித்து அபிவிருத்தித் திட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டுள்ளன. துறைமுக நகரத் திட்டம், புதிய களனி பாலம் மற்றும் துறைமுக நுழைவாயில் வீதித் திட்டம், பேலியகொடை பல்பொருள் வர்த்தக சந்தைத் தொகுதி என்பன அபிவிருத்தித் திட்டங்களில் சிலவாகும். அதனைத் தவிர கொழும்பில் வெள்ளம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், புதிய முத்துவலை மற்றும் தும்முல்ல, பம்பலப்பிட்டியை அண்மித்து நிலக்கீழ் வடிகாண் கட்டமைப்பு தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. சில வீதிகள் புனரமைக்கப்பட்டு வரும் அதேவேளை, நீர் வழிந்தோடும் பகுதிகள் தடைப்பட்டதன் காரணமாகவே பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் கொழும்பு நகரில் மழை நீரையும் வெள்ளத்தையும் கட்டுப்படுத்துவதற்கென தெரிவித்து பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அப்படியிருந்தும் சில மணித்தியாலங்கள் மழை பெய்தாலே நகரமும் அதனைச் சூழவுள்ள பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்குகின்றன. நாட்டின் மேலும் சில பகுதிகளிலும் தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.