அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இருந்து 3 ரஷ்ய பல்கலைக்கழகங்கள் நீக்கம்

by Staff Writer 09-09-2020 | 9:35 PM
Colombo (News 1st) உலகப் பிரசித்திபெற்ற Patrice Lumumba உள்ளிட்ட ரஷ்யாவின் மூன்று பல்கலைக்கழகங்களை அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு இலங்கையின் மருத்துவ சபை தீர்மானித்துள்ளது. விரிவாக ஆராய்ந்ததன் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மருத்துவ சபை தெரிவித்துள்ளது. சோவியத் குடியரசு இருந்தபோது Patrice Lumumba என்றழைக்கப்பட்ட பல்லைக்கழகம் தற்போது ரஷ்ய மக்கள் நட்புறவு பல்கலைக்கழகம் (People's Friendship University of Russia) என அழைக்கப்படுகிறது. இந்த பல்கலைக்கழகத்தைத் தவிர்ந்த பிரோகோவ் ரஷ்ய தேசிய மருத்துவ ஆராய்ச்சி பல்கலைக்கழகம் (Pirogov Russian National Research Medical University) மற்றும் ட்வேர் அரச மருத்துவ பல்கலைக்கழகம் (Tver State Medical University) ஆகியனவும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. கடந்த ஜுன் மாதம் 26 ஆம் திகதி நடைபெற்ற வருடாந்த பொதுக்கூட்டத்தின்போது இலங்கை மருத்துவ சபை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. வருடாந்தம் ரஷ்ய அரசாங்கம் இலங்கை மாணவர்களுக்காக சுமார் 40 புலமைப் பரிசில்களை வழங்குவதுடன், அதில் ஐந்து புலமைப் பரிசில்கள் ரஷ்ய பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டப்படிப்பை பெறுவதற்காக வழங்கப்படுகிறது. வழங்கப்படவுள்ள புலமைப் பரிசில்களை குறித்த பல்கலைக்கழங்கள் உறுதிப்படுத்தியுள்ள நிலையிலேயே இலங்கை மருத்துவ சபை குறித்த மூன்று பல்கலைக்கழகங்களையும் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. இலங்கை மருத்துவ சபையின் பதிவாளர் டொக்டர் ஆனந்த ஹப்புகொடவிடம் இது தொடர்பாக வினவியபோது, ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை நிபுணர் குழுவினர் ஆராய்ந்து, பல்கலைக்கழகங்களுக்கான அனுமதி தொடர்பில் தீர்மானிப்பதாக அவர் தெரிவித்தார். கேள்விக்குரிய மூன்று பல்கலைக்கழகங்களும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டாலும் அந்த தீர்மானத்திற்கு முன்னதாக பட்டப்படிப்படை நிறைவு செய்த மற்றும் தற்போது கல்விகற்கும் எந்தவொரு மாணவரும் மருத்துவ சபையில் பதிவு செய்வதில் தடையில்லை என அவர் குறிப்பிட்டார். இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதன் பின்னர் குறித்த மூன்று பல்கலைக்கழகத்திலும் புலமைப்பரிசிலை பெற்றுக்கொள்ளும் மாணவர்கள் இலங்கை மருத்துவ சபை கட்டளைச் சட்டத்திற்கு அமைய பரீட்சைகளில் தோற்ற முடியாது எனவும் பதிவாளர் கூறினார்.

ஏனைய செய்திகள்