Colombo (News 1st) MT New Diamond எனப்படும் மசகு எண்ணெய் போக்குவரத்துக் கப்பலில் மீண்டும் பரவிய தீ தற்போது ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இரசாயனப் பொருட்கள் மற்றும் நீரை பயன்படுத்தி தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை தொடர்வதாக கடற்படை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கப்பலில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள பகுதியில் டீசல் படர்ந்துள்ளமை கண்காணிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்ததாவது,
இந்த தீயை கட்டுப்படுத்துவதற்காக நேற்றிரவு முதல் பயன்படுத்தப்பட்ட நீர் காரணமாக, கப்பலின் இயந்திர அறை நீரினால் நிரம்பியிருக்கலாம் என நினைக்கின்றோம். கப்பலின் பின்பக்கம் சற்று மூழ்கியுள்ளதையும் அவதானித்தோம், கப்பலுக்கு ஏற்பட்ட சேதம் காரணமாக கசிந்த டீசல் கப்பலுக்கு பின்பக்கமாக சுமார் ஒரு கடல் மைல் தூரத்திற்கு படர்ந்துள்ளதைக் காண முடிந்தது. ஆனால் இந்த எண்ணெய்க் கசிவு கப்பலின் மசகு எண்ணெய் தாங்கியிலிருந்து ஏற்பட்டது அல்ல. கப்பலின் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த, தீ பற்றிய பகுதியின் கீழ் பகுயில் இருந்த தாங்கிகளில் இருந்தே டீசல் கசிந்துள்ளது. கசிந்த எண்ணெய்யை அகற்றுவதற்காக மத்தளை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்திய கரையோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான விமானமொன்று குறித்த பகுதிக்கு சென்று விசேட இரசாயனமொன்றை தூவியுள்ளது. இதன்மூலம் ஏற்படக்கூடிய பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது
MT New Diamond கப்பலில் பரவிய தீ நேற்று முன்தினம் பிற்பகல் வேளையில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டாலும் நேற்று பகல் கப்பலின் நடுப்பகுதியில் அவ்வப்போது தீ ஏற்பட்டது.
நிலவும் சீரற்ற வானிலையால் மீண்டும் தீ பரவியதாக கடற்படை நேற்று பிற்பகல் விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கமைய மீண்டும் இன்று தீயணைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இன்று காலை தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், மீண்டும் மீண்டும் தீ பரவியதாக விமானப் படை தெரிவித்தது.
இந்தக் கப்பல் இலங்கையில் இருந்து சுமார் 28 கடல் மைல் தொலைவில் உள்ளது.
இதேவேளை, MT New Diamond என்ற மசகு எண்ணெய் போக்குவரத்து கப்பலின் 20 பணியாளர்கள் இன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.
இதேவேளை, இந்த கப்பல் தொடர்பில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து சட்ட மா அதிபர் திணைக்களத்தில் இன்று கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
கப்பலில் இருந்து எண்ணெய் கசிந்தால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக அவசர நிலை முகாமைத்துவ குழு இன்று கொழும்பில் கூடியது.
இதேவேளை, கப்பலில் ஏற்பட்ட தீயினால் சமுத்திர சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பீடு செய்வதற்காக சென்ற குழுவினர் நீர் மாதிரிகளைப் பெற்றுள்ளனர்.
நாரா நிறுவனத்திற்கு சொந்தமான சமுத்திர ஆராய்ச்சி கப்பலொன்று குறித்த கடற்பரப்பில் மேலதிக ஆய்வுகளை நடத்தவுள்ளது.