மன்னாரில் மக்கள் சக்தி குழுவினர்

by Staff Writer 08-09-2020 | 8:25 PM
Colombo (News 1st) மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் திட்டம் 11ஆவது நாளாக மூன்று மாவட்டங்களில் இன்றும் முன்னெடுக்கப்பட்டது. மன்னார், காலி , அநுராதபுரம் மாவட்டங்களில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கிராமங்கள் தோறும் சென்ற மக்கள் சக்தி குழுவினர் பதிவு செய்தனர். மன்னார் - நடுக்குடாவில் போக்குவரத்து உரிய முறையில் இடம்பெறாமையால், பாடசாலை மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். பிரதேசத்தில் உள்ள மாணவர்கள் சுமார் 2 கிலோமீட்டர் நடந்து சென்று பிரதான வீதியை சென்றடைந்த பின்னரே அங்கிருந்து பாடசாலைக்கு பஸ்ஸில் பயணிக்க வேண்டியுள்ளது. ஒன்பது கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயிலும், துள்ளுக்குடியிருப்பு மகா வித்தியாலயத்திற்கு குடிநீர் வசதியை ஏற்படுத்தித் தருமாறு மக்கள் சக்தி குழாத்தினரிடம் மக்கள் கோரினர். இதேவேளை, இங்குள்ள மக்களின் பனைசார் உற்பத்திக்கு உரிய சந்தைப்படுத்தல் வசதியில்லை என்பதையும் மக்கள் சக்தி குழுவினர் கேட்டறிந்து கொண்டனர். பாவிலுப்பட்டங்கட்டிக் குடியிருப்பு பகுதிக்கு விஜயம் செய்த மக்கள் சக்தி குழாத்தினர் வீதிகள் பல வருடங்களாக புனரமைக்கப்படாமையைஅவதானித்தனர். தலைமன்னார் கிராமம் சிலுவை நகருக்கு சென்ற மக்கள் சக்தி குழாத்தினர் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களை சந்தித்து அவர் துயர் பகிர்ந்தனர். இங்கு ஒரு வீட்டினுள் இரண்டு மூன்று குடும்பங்கள் வாழ்ந்து வருவதை மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் குழுவினரால் காண முடிந்தது. மன்னார் - வசந்தபுரத்தில் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ள போதிலும், நிர்மாணப் பணிகள் இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை. எனினும், பலர் தற்காலிக இருப்பிடங்களிலேயே வாழ்ந்து வருகின்றனர். இதேவேளை, மக்கள் சக்தி திட்டத்தின் மற்றயை குழாத்தினர் காலி மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைப் பதிவு செய்தனர்.